திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு பகுதியில் இந்தியன் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இங்கிருந்து, புதுவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு எல்பிஜி டேங்கர் லாரி மூலம் எரிவாயு நிரப்பி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. எரிவாயு நிரப்பி அனுப்பும் பணியில், ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விபத்து காப்பீடு உள்ளிட்டவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அவர்களது கோரிக்கையை நிர்வாகம் கண்டுகொள்ளாததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எரிவாயு நிரப்பும் பணி முடக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு எல்பிஜி டேங்கர் லாரி மூலம் எரிவாயு விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது.