ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தீனா (40) யூடியூபராக இருந்து வருகிறார். சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இவர் மரக்கன்றுகள் வைத்து ராமேஸ்வரம் தீவு பகுதியை பச்சை வனமாக மாற்றும் நோக்கத்தில் செயல்பட்டுவருகிறார். இந்தநிலையில், இவரது அடுத்த முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடல் வளம் காப்போம், மரம் வளர்ப்போம், இயற்கை காப்போம், பாலிதீன் ஒழிப்போம் போன்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளியான இவர் செல்லும் வழியெங்கும் மரக்கன்றுகள் வைத்துச் செல்ல உள்ளார். ராமேஷ்வரம் பகுதியில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய இவர் 30 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தீனாவின் பயணத்தை ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ராமேஷ்வரம் மீனவ சங்க தலைவர்கள், தங்கச்சிமடம் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.