கோலார் தங்கவயலை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட புனைவுக்கதையான கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னடத்தில், 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போதும் வசூலை வாரிக்குவித்தது. இதனால் இப்படத்துக்கான 2வது பாகம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் 2வது பாகம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் போக்கும்வகையில் இந்த முறை கே.ஜி.எஃப் 2ம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தின் முதல்நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூலாகி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது இதன் 2வது நாளும் வசூலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கே.ஜி.எஃப்-2 படம் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னொரு முக்கிய விஷயமாக இப்படத்தை தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியும் பாராட்டியிருக்கிறார். இப்படத்த்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரை தொலைபேசியின் மூலம் அழைத்துப் பாராட்டியுள்ளார். அத்துடன் படக்குழுவினருக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.