வைஷாலி ரமேஷ்பாபு. வயது 19. ஆனால் இப்போதே சதுரங்க விளையாட்டில் பெண்களுக்கான சர்வதேச க்ராண்ட் மாஸ்டர். உலக சாம்பியன்களைக் கூட கதிகலங்கச் செய்த புலி. மூளை சார்ந்த விளையாட்டில் கால் பதித்து, சிறு வயதிலேயே தன் பெயரை உலகறியச் செய்தவர் வைஷாலி ரமேஷ்பாபு. இந்தச் சிக்கலான ஆட்டத்தில் விஷாலிக்கு எத்தனையோ பெருமைகள் வந்து சேர்ந்திருக்கின்றன. 12 வயதுக்குக்கீழ், 14 வயதுக்குக் கீழானவர்களுக்கான சதுரங்கச் சாம்பியனாக வென்றவர் வைஷாலி. இன்னும் பல கனவுகளுடன் இருக்கும் வைஷாலியின் இலக்குகள் என்ன? மூன்றாம் ஆண்டு பி.காம். படித்து வரும் அவரிடமே கேட்போம்.
சதுரங்க ஆட்டத்தில் உங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது?
ஆறு வயதில் இருந்து செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சிறு வயதில் அதிகமாக டிவி பார்ப்பேன். அதனால் எனது தந்தை என்னை செஸ் கிளாஸிற்கும், டிராயிங் கிளாஸிற்கும் அனுப்பி வைத்தார். அதில் சேர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அதிலிருந்து சதுரங்கத்தின்மீது ஆறாத பற்று வளர்ந்தது.
இந்த விளையாட்டில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் என்ன?
சிறு வயதில் எனது பெற்றோர் நிதி ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். ஏனென்றால் தம்பியும் செஸ் பிளேயர். இரண்டு பேரையும் செஸ் விளையாட்டில் வளர்த்தெடுப்பது என்பது மிகவும் கடினம். இருப்பினும் எங்களுக்கு சிரமம் தெரியாதவாறு எங்களது பெற்றோர் பார்த்துக்கொண்டனர்.
எந்த விதமான பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறீர்கள்?
எனது பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ். ஊரடங்கிற்கு முன்பு அவரிடம் நேரில் சென்று பயிற்சி பெற்றேன். ஆனால் இப்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் பயிற்சி பெறுகிறேன். ஒரு நாளில் 5லிருந்து 6 மணி நேரம் வரை பயிற்சி பெறுகிறேன்.
கடந்த முறை சாம்பியன் போட்டிக்குச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். செஸ் விளையாடும்போது மகிழ்ச்சியாக விளையாடுவேன். ஒவ்வொரு முறை கடினமாக உழைக்கும்போதும் கண்டிப்பாக அப்போட்டியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கும்.
கடந்த முறை அடைந்த தோல்வியை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
எனது பெற்றோர், நான் வெற்றி அடையும்பொழுது ஊக்கமளிப்பதைவிட தோல்வி அடையும்பொழுது தான் இருமடங்காக ஊக்கமளிப்பார் கள். முதலில் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, அதிலிருந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப் பழகிக்கொண்டி ருக்கிறேன். அடுத்த முறை நன்றாக விளையாடி வெற்றி பெறு என்று எனது பயிற்சியாளர் ஊக்கமளிப்பார்.
இவ்விளையாட்டில் நீங்கள் கண்ட சிரமங்கள் என்ன?
செஸ் விளையாட்டைப் பார்த்தால் வெறும் செஸ் போர்டு, காய்ன்ஸ் இருந்தால் போதும் என்று தோன்றும். ஆனால் இது ஒரு காஸ்ட்லியான கேம். ஒரு போட்டிக்குப் போவதென்றால் நிறைய செலவு ஆகும். பயணச் செலவு, தங்கும் செலவு, உணவுச் செலவு என்று நிறைய பணம் தேவைப்படும். இப்போது எனக்கு ஒரு ஸ்பான்சர் கிடைத்திருக்கிறார். அதனால் பிரச்சனை இல்லை.
உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவும் சாம்பியன்தான். இது எந்த அளவுக்கு உங்களுக்கு உதவுகிறது?
எனது சகோதரன் செஸ்ஸில் கிராண்ட் மாஸ்டர். அவனிடம் செஸ்ஸில் எனக்கு எந்த சந்தேகம் வேண்டுமானாலும் எந்நேரத்திலும் கேட்டுக்கொள்ளலாம். மிகவும் எளிமையாகப் புரி வைப்பான்.
செஸ் போட்டியில் உங்களுக்கு இருக்கும் இந்த ஆர்வம் படிப்பை பாதிக்கிறதா?
செஸ் விளையாடுவதால் எதை வேண்டுமென்றாலும் எளிதில் புரிந்துகொள்ளலாம். அதனால் படிப்பதற்கு, செஸ் ஒரு தடையாக இருந்ததில்லை. தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு படித்தாலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மேலும் ஸ்போர்ட்ஸ் ஸ்டூடண்ட் என்பதால் வகுப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததில்லை. மேலும் நான் படித்த பள்ளியின் ஆதரவு எனக்கு இருந்தது. கல்லூரியின் ஆதரவும் முழுமையாக இருக்கிறது. ஆசிரியர்களும் நண்பர்களும் எனது படிப்பிற்கு உறுதுணையாக நிற்கிறார்கள். அதனால் செஸ் எனக்குப் பயனுள்ளதாகத் தான் இருக்கிறது.
இந்த விளையாட்டில் சின்னப் பெண் குழந்தைகள் மேலே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனவா?
ஆம். சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் போட்டிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. அவர்களுக்கான வாய்ப்புகளும் அதிகளவில் இருக்கின்றன. வயதின் அடிப்படையில் போட்டிகள் நடக்கும்.
இன்னும் எந்தவித போட்டிகளுக்காக நீங்கள் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறீர்கள்?
விமன் கிராண்ட்மாஸ் டராக ஆகிவிட்டேன். அடுத்து மென் இன்டர்நேஷனல் மாஸ்டரை முடிப்பதற்கு ஒரு நார்ம் தேவைப்படுகிறது. அதை அடுத்த போட்டியில் பங்கு கொண்டு பெறுவதற்குப் பயிற்சி மேற் கொண்டு வருகி றேன்.
‘நான் என்னை நினைத்துப் பெருமைப்படு கிறேன்’ என்று நினைக்க வைத்த தருணம் எது ?
எனது 11 வயதில் 13 வயதுக்குக் கீழானவர் களுக்கான நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி யில் பங்கேற்றேன். அப்போட்டியில் வெற்றி பெற்றேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருண மாக இன்று வரை இருக்கிறது.