வேலூர் மாவட்டம்,வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு பதவியேற்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதில் அறங்காவல் குழு தலைவராக அசோகன் உறுப்பினராக அருணாச்சலம், தேவி, சுகுமார், மகேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றுகொண்டனர். திமுகவை சேர்ந்தவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காலணி அணிந்துகொண்டு வந்தே கோவிலுக்குள் நடைபெற்ற இந்தவிழாவில் கலந்துகொண்டது பக்தர்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மட்டும் தற்போது அறங்காவல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 மாவட்டங்களுக்கு அடுத்த மாதத்திற்குள் அறங்காவல் குழு நியமிக்கப்படும்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”அறநிலையத்துறையும் தமிழக அரசின் கட்டுபாட்டில் தான் வருகிறது. நீங்கள் தேவாரம் பாடுங்கள், திருவாசகம் பாடுங்கள். ஆனால், இது அரசு விழா, இதில் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடியிருக்க வேண்டும். பாடாதது வருத்தமளிக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். எந்தஅரசு விழாவானாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது சட்டவிதி. அதை நீங்கள் கடைபிடியுங்கள். அறங்காவலர் குழுவுக்கு வந்துள்ளவர்கள் ஒற்றுமையாக மதுகுடிக்காதவர்களையும், கோவில் சொத்து அபகரிக்காதவர்களையும், நல்லவர்களையும், அறங்காவல் குழுவில் போடுங்கள். இல்லையென்றால், உங்களை வேலையை விட்டு எடுத்துவிடுவோம் என்று எச்சரித்தார். மேலும் பேசிய துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபு அதிமுகவில் இருக்கும்போதும், திமுகவில் இருக்கும் போதும் நேர்மையாக நடந்துகொண்டார். வேலூர் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதனை, பேருந்து நிலையம் கட்ட அளிக்க வேண்டும். அப்போதுதான் பேருந்து நிலையம் பூர்த்தி அடையும்” என்று பேசினார். இந்தநிலையில், அரசு விழாவில் அபிராமி அந்தாதி பாடியதற்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். ஆனால், பெரும்பாலான திமுகவினர் கோவிலுக்குள் செருப்பு அணிந்து வந்திருந்தனர். இதுவும் ஒருவித திராவிட மாடல் தான் போல என்று பக்தர்கள் பேசி சென்றனர் என்பது குறிப்பிடத்தகத்து.