திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினருக்கு நித்திஷ்(11), ஜீவன்(7) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று மாலை வெங்கடேசன் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது, சின்னம்மாப்பேட்டை டாஸ்மாக் கடை அருகே உள்ள சிக்கன் பக்கோடா சென்டரில் இருந்து குழந்தைகளுக்கு கோழிக்கால்களை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்த வெங்கடேசனிடமிருந்து குழந்தைகள் நித்திஷ், ஜீவன் ஆகியோர் அதனை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் குழந்தைகளை உடனடியாக திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பின்னர், குழந்தைகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிக்கன் சென்டரில் கோழி கால்களை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.