பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி தூள் கிளப்பிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர். கே.ஜி.எஃப்- 2 திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் திரைப்படத்தின் வசூல் சக்கைப்போடு போட்டு வருகிறது. மேலும், இன்னும் திரையரங்களுக்கு கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தை காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருந்து வருகிறது. முதல் தட்டு நடிகர்களின் ரசிகர் பட்டாளங்கள் கூட திரைப்படம் வெளியான ஒரு வாரத்துக்குள்ளேயே திரையரங்களுக்கு சென்று பார்ப்பதில்லை. இந்த நிலையில், இன்றுடன் 42 நாட்கள் ஆகியும் இன்றும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இது ஒரு பக்கம் இருக்க, இதுவரை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மொத்தம் ரூ.1227 கோடியை ஈட்டியுள்ளது.