15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 56ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. நேற்று மாலை 7.30 மணிக்கு நவி மும்பை டாக்டர் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 17.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி இந்ததொடரில் தனது 5ஆவது வெற்றியை கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து இதுவரை கொல்கத்தா அணியும் மும்பை அணியும் நேருக்கு நேர் 31 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. அதில், 9 ஆட்டங்களில் கொல்கத்தா அணியும் 22 ஆட்டங்களில் மும்பை அணியும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்ததொடரில் 12 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள கொல்கத்தா அணி 5 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவி, புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை இந்ததொடரில் விளையாடிய 11 ஆட்டங்களில் 2 ஆட்டத்தில் வெற்றியும், 9 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தநிலையில், நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக முந்தைய ஆட்ட தரவுகளும், தற்போதைய கணிப்பும் வைத்து கூறப்பட்ட நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக கொல்கத்தா அணி வெற்றிப்பெற்று உள்ளது.