’அம்மா, நீங்க நல்லா இருக்கீங்களா?’
‘சார், உடல் நிலை நல்லா இருக்கா?’
இப்படித் தினமும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டிக் கேட்பார் பிரேமா. சில வீடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். சில வீடுகளில் முகச்சுளிப்பு. இருந்தாலும் கொரோனாவைத் தடுப்பதற்காக சோர்ந்து போகாமல் உழைத்தவர்தான் அவர்.
சென்னை மாநகராட்சியின் கொரோனா காலத்து சிறப்புப் பணியாளர் பிரேமா. வீடுகளில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் இருக்கிறார்களா, சோதனை தேவைப்படுகிறதா, கொரோனா நோயாளிகள் இருந்தால் அவர்களுக்கு என்ன உதவி தேவை என்று ஆதரவாய்ச் செயல்படும் ஆபத்துக் காலத்துத் தூதர் பிரேமா. கொரோனா அச்சுறுத்தும் காலத்தில் சேவைக்காக வந்தவர் அவர்.
சென்னை மாநகராட்சி, கொரானா காலத்தில் கொரானா பரவுவதைத் தடுப்பதற்காக வட்டம் வட்டம் பணிக்கு ஆட்கள் எடுத்தது. இதற்காக ரூ.15,000 மாத சம்பளத்தில் ஆட்கள் அமர்த்தப்பட்டனர். அப்படித்தான் பிரேமாவும் பணி பெற்றார்.
பிரேமா ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக இருந்தார். ஐசிஎப் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் அவர் பணிபுரிந்தார். கொரோனா காலத்து ஊரடங்கில் அவரும் வேலை இழந்தார். அவருடைய கணவருக்கும் வேலை போனது. என்ன செய்வது என்று திகைத்து நின்றார் அவர். அந்த சமயத்தில்தான் மாநகராட்சியின் களப் பணியாளர்கள் குறித்த செய்தி அவருக்குக் கிடைத்ததாம்.
‘தொலைக்காட்சியில் களப் பணியாளர்களின் சேவையைக் கண்டு வியந்தேன். அப்பணியினைப் பற்றி நட்பு வட்டாரங்கள் மூலம் கேட்டறிந்தேன். அண்ணாநகர் பகுதியில் நேர்முகத்தேர்விற்கு சென்றேன். எதிர்பார்த்தபடி அந்த வேலையும் கிடைத்தது’ என மனம் திறக்கிறார் பிரேமா.
‘பணியில் அமர்த்தப்பட்ட போது ஒரு வாரம் மக்கள் எங்களை பயத்துடன் பார்த்தனர். முதலில் கதவுகளைத் திறந்து கூட பேச யோசித்தனர். நாட்கள் நகர நகர மக்கள் விழிப்புணர்வு அடைந்தனர். மேலும் நாங்களும் மக்களிடம் பேசினோம். சில நாட்களில், ‘பிரேமா வந்துவிட்டீர்களா? நாங்கள் நலமாக உள்ளோம்’ என கூறும் அளவிற்கு அன்பாகி விட்டனர்‘ என்கிறார் பிரேமா.
மாநகராட்சிக் களப் பணியாளர்களுக்கு வெப்பநிலைமானி மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போன்ற கருவிகள் கொடுக்கப்பட்டன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்த பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.
‘இந்தக் கருவிகளை நீங்கள் எல்லோருக்கும் பயன்படுத்துகிறீர்கள். அதனால் எங்களுக்கு பாதிப்பு வராதா? என மக்கள் அஞ்சினார்கள். பிறகு இக் கருவிகளின் முக்கியத்துவத்தையும் கட்டாயத்தையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினோம். இப்பொழுது மக்கள் எங்களுக்கு அதிகமாகவே ஒத்துழைக்கின்றனர் என்றே கூறலாம்’ என தன் அனுபவத்தைக் கூறுகிறார் பிரேமா.
தினமும் காலை 7 .30 மணி முதல் 8 மணிக்குள் பிரேமா போன்ற பணியாளர்கள் களத்திற்கு வந்துவிடுகிறார்கள். அதிக காய்ச்சல் அல்லது அதிக இருமல் இருப்பவர்களைக் கண்டு குறிப்பு எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் பிரிவில் 83 பேர் இருக்கிறார்கள். அதில் 16 பேருக்கு ஒரு சூப்பர்வைசர் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 150 வீடுகளுக்கு ஒருவர் போக வேண்டும். யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை எனும் பொழுது கண்காணிப்பாளருக்கு செய்தி உடனே கொடுக்கப்படுகிறது. அவர்களும் உடனே களத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் மூலமாக டாக்டருக்கு செய்தி அனுப்பப்படும். உடனே அவர்களைத் தனித்து டெஸ்ட் எடுத்து அவர்களைக் குணப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
‘கொரோனா பாதிப்பை முதலில் தொலைக்காட்சியில் பார்த்து நான் பயந்தேன். முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் எல்லாம் பாதிக்கப்பட்டது கண்டு நான் நடுங்கித்தான் இருந்தேன். அவர்களை நான் வியப்பாகவும் பார்த்திருக்கிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகம் எனக்கும் தேவையாக இருந்தது. ஆனால் இப்பொழுது களத்தில் இறங்கி நானும் சேவை செய்கிறேன் என்பதை எண்ணி மனமார உணரத் தொடங்கி இருக்கிறேன். அது மனதை பலப்படுத்துகிறது. இப்பொழுது களத்தில் நடக்கும் நிகழ்வுகளை நான் என் கணவரிடமும் குழந்தைகளிடமும் பகிர்கிறேன். வீடுகளுக்குச் செல்லும்போது சிலர் என்னைப் பார்த்துக் கை எடுத்துக் கும்பிடும்போது என்னை நினைத்து நானே பெருமை கொள்கிறேன்’ என சொல்கிறார் பிரேமா.
‘எங்கள் பிரிவின் தலைவர்களாக இருக்கும் மாநகராட்சிப் பொறி யாளர்கள், எங்கள் அனைவரின் மீதும் அதிக அக்கறை கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் எங்களுக்கு அதீத நம்பிக் கையினைத் தருகின்றனர்’ என்கிறார் பிரேமா.
வாரம் ஒரு முறை ஜிங்க் மாத்திரைகளும் மல்டி விட்டமின் மாத்திரைகளும் பிரேமா போன்ற களப் பணியாளர்களுக்குக் கொடுக் கப்படுகின்றன. மேலும் அவர்களின் பாதுகாப்பிற்காக முக கவசம், கையுறை போன்றவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
‘இவற்றையெல்லாம் தாண்டி இந்த ஐந்து மாத களப்பணியில் எங்களுக்கு எந்த ஒரு தீங்கும் இல்லாது கடவுள் எங்களை அனுக்கிரகித்துக் கொள்வதாக எண்ணுகிறோம்’ என கூறுகிறார் பிரேமா.
மாநகராட்சியின் கொரோனா களப் பணியாளர்களை வழங்கி வந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் அவர்களைத் திரும்பப் பெறத் தொடங்கிவிட்டன. மாநகராட்சி நியமித்த பணியாளர்கள் தொடர்வார்கள். மேலும் சில ஊழியர்களை எடுக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
‘இந்த வேலை எவ்வளவு நாள் இருக்கும் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் இந்நோய் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என நான் எண்ணுகிறேன். கடவுளையும் தொழுகிறேன். மேலும் கொேரானா குறையும் தறுவாயில் டெங்கு காய்ச்சல் இப்பொழுது பரவி வருகிறது. அதனைப் பற்றி விவரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன’ என தன் ஐந்து மாத அனுபவத்தை அள்ளித் தெளிக்கிறார் பிரேமா. கொேரானா பாதித்ததால் தாய் தந்தையை குழந்தைகள் ஒதுக்கும் செய்திகளை தினந்தோறும் செய்திகளில் பார்க்கிறோம். தன்னலம் கருதாது தன் தொழிலை சேவையாக செய்யும் பிரேமா போன்றவர்களை இந்தச் சமூகம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
இப்போதைக்கு முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற செயல்களால் நாம் பிரேமா போன்றோரின் சுமையைக் குறைக்க முடியும்.
-பிரேமா