வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில், கொரோனாவால் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரை இழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வைப்பு நிதியும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும் வைப்பு நிதியாக வழங்கப்பட்டது. மேலும், பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் கீழ் கல்வி பெறுவதற்கான கடன் வசதி மற்றும் கடனுக்கான வட்டியை மத்திய அரசே ஏற்றுகொள்ளுதல், குழந்தைகளுக்கு 23 வயது வரையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டம் மற்றும் காப்பீடு பிரீமியத்தையும் அரசே செலுத்துதல், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்குதல், உயர்கல்வி பயில ரூ.2.50 லட்சம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், இந்த வைப்புநிதி குழந்தைகளுக்கு 23 வயது நிரம்பும்போது ரூ.10 லட்சமாக உயர்ந்திருக்கும் அதனை குழந்தைகள் பயன்படுத்திகொள்ளலாம். முன்னதாக கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.