கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா வி நாயர் என்ற மருத்துவ மாணவி ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது எஸ்.கிரண் குமார் என்ற கேரள காவல்துறை அதிகாரியுடன் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கடந்த ஆண்டு நடைப்பெற்றது. இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் தனது கணவன் வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து விஸ்மயாவின் பெற்றோர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் உயிரிழந்திருப்பதாகவும் வழக்குத்தொடுத்தனர். இதைத்தொடர்ந்து கிரண் குமார் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றம், 42 சாட்சியங்கள், 108 பக்க ஆவணங்கள் மற்றும் உயிரிழந்த விஸ்மயாவின் செல்போன் உரையாடல் ஆகிய சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 507 பக்க குற்றப்பத்திரிக்கையை கொண்டு கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.12.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நாடு முழுவதும் வரதட்சணைக்கு எதிராக அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் கேரள நீதிமன்றம் ஒரே ஆண்டில் விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.