தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக பல இடங்களில் கோடை மழை பெய்தது. இந்தநிலையில், காஞ்சிபுரம் வையாவூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மோகன் வெள்ளைகேட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், 9ஆம் வகுப்பு படிக்கும் பவித்திரன் மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் நத்தகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் மோகனின் இளைய மகனான நந்தகுமார் வையாவூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதற்கு நடுவே நந்தகுமார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மோகன் வீட்டுக்கு அருகே இருக்கும் வயல்வெளியில் அவர்களின் கால்நடைகள் மழையில் நினைவதை நந்தகுமார் கண்டுள்ளார். இந்தநிலையில், மழையில் நனையும் கால்நடைகளை வீட்டுக்கு அழைத்துவர சென்ற நந்தகுமாரை இடி தாக்கியுள்ளது. இதனையடுத்து நந்தகுமாரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு அவசர ஊர்த்தியில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா காவல்துறையினர் சிறுவன் நந்தகுமாரின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கால்நடைக்காக இரக்கப்பட்டு சிறுவன் இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தபகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.