ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கிறது. சிலருக்கு, தாம் உலக அழகியாக வேண்டும் என்கிற கனவும் அடங்கியிருக்கிறது. அதன்படி, இவ்வுலகில் உலக அழகியானவர்களின் வரிசையில் எத்தனையோ பேரைக் குறிப்பிடலாம். தவிர இன்றும், உலக அழகி கிரீடத்தை வெல்வதற்காகக் காத்திருப்போர் பட்டியலும் அதிகம். நாட்டுக்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்படும் அழகிகளுக்கே போட்டி அதிகமாய் இருக்கும்போது, சர்வதேச அளவில் என்றால் சொல்லவே முடியாது. ஏன், நினைத்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக, உலக அழகிப் போட்டியில் அழகிகளின் புத்திசாலித்தனம், பண்பு, சேவை மனப்பான்மை போன்ற அம்சங்களைச் சோதிப்பதற்காகச் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கு மிகச் சரியாகவும், சாதுர்யமாகவும் பதில் சொல்பவர்களே உலக அழகி கிரீடத்தை அலங்கரிக்கிறார்கள். அதை வெல்வதற்காகத் தன்னம்பிக்கையுடன் போராடுபவர்கள் பலர் இருப்பினும், சிலர் மட்டுமே அதில் வாகை சூடுகிறார்கள். என்றாலும், மற்றவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்து வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர். அப்படியான ஓர் இடத்தைத்தான், சமீபத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் பிடித்து சாதனை படைத்திருக்கிறார், இந்திய அமெரிக்க அழகியான சாய்னி.
ஆம், காயங்கள் ஒருபோதும் கனவைச் சிதைக்காது என்பதற்கு சாய்னியின் கண்ணீர்க்கதையும், இன்று உலக மக்களுக்கு உதாரணமாகியிருக்கிறது. 97 போ் கலந்துகொண்ட, 70வது உலக அழகிப் போட்டியில், போலந்தைச் சோ்ந்த கரோனாலி பைலாவ்ஸ்கா உலக அழகிப் பட்டத்தை வென்றாா். இந்திய அமெரிக்க அழகியான சாய்னி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதில் சாய்னி, தன்னுடைய பள்ளிக் காலத்திலேயே அழகிகளின் அழகியாக வலம்வந்தவர். அதற்காகப் பல நாட்டு உலக அழகிகளின் போட்டோக்களைத் தன் வீட்டுச் சுவரில் மாட்டி அலங்கரித்தவர். அத்துடன், அவர்களைப்போலவே அழகையும் பராமரித்தார். ஆறு வயதிலேயே தானும் ஓர் உலக அழகியாக வலம் வர வேண்டும் என்கிற கனவுடன் மிதந்தவருக்குத்தான் எதிர்பாராதவிதமாக அந்த விபத்து நிகழ்ந்தது. கல்லூரிக் காலத்தில் நடந்த கார் விபத்தில், அவருடைய முகம் சிதைந்து கன்னங்கள் முழுவதும் காயம்பட்ட தழும்புகள். ஆனாலும், அந்தக் காயங்களில் தன் கண்ணீரை நனைத்து மருந்திட்டுக் கொண்டார். என்றாலும் வலி நிறைந்த அந்த வடுக்களை மறைக்க பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார், சாய்னி. அதன்பின்பு, அவரது சிதைந்த முகம் மறைந்து, சிகரம் தொடும் முகம் பிரகாசித்தது. ஆம், அந்தப் பிரகாசமான முகம்தான் இன்று, உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து உச்சத்தை அடையச் செய்திருக்கிறது. அத்துடன், `நோக்கத்துடன் அழகு’ என்ற பிரிவில் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் தன்னுடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கனவு கண்ட சாய்னி, தன்னம்பிக்கை நாயகியாகவும் மிளிர்கிறார்.