காயா
பழமா
தன்னிடத்திலிருந்து
கேள்வி கேட்டுவிட்டு
எதிரே போய் உட்கார்ந்து
எதிராளுக்காக
காயோ
பழமோ சொல்லும்
விளையாட்டுத் தோழமையற்ற
சிறுமியைப் போல்
நானே நீயாகவும்
நீயே நானாகவும்
மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறேன்
நீயற்ற பொழுதுகளில்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காலைச் சந்திப் பூசை முடிந்து
கருவறை அடைத்து,
முழுமையாகத் தாளிட்டுவிடாத
கோயில் முககோபுரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்
அந்த நினைவழிந்தவளின் நினைவில்
எது நிறைந்திருக்கும்?
கருவறை கடவுளா?
கோபுரத்தின் பிரம்மாண்டமா?
கால்மேல் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பின் பாதையைப் பின்தொடரும்
அவளின் நினைவுகளில்
தளும்பி மேலெழுந்து வந்திருக்கக் கூடும்,
அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்ட
விரல்கள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நீண்டு செல்லும்
பிரகாரத்தின்
சிறு வளைவு தரும்
சொல்ப தனிமையைக் கடக்கிறோம்.
அநாதிக் காதலர்கள்
கடந்திருக்கும் பிரகாரம்
நம் தனிமையைக் காக்க
கண்மூடித் திறந்து
நம்மைப் பதின்பருவத்திற்குத் திரும்பச் செய்கிறது.
வளைவின் முடிவில்
பிரிந்து நடக்கும் கால்களின் சில்லிப்பில்
நம் ரகசியம் அறிந்த
கருவறை உமையவளின்
புன்னகை விரியும்.
– அ . வெண்ணிலா