இன்று பெரும்பாலான பெண்கள் இரண்டு முக்கியமான வலியால் அவதிப்படுகிறார்கள். அதில் முக்கியமானது கழுத்து வலி. இரண்டாவது முட்டி வலி.
நம் தலைப்பகுதியையும் உடம்பையும் இணைக்கும் ஒரு செங்குத்தான பாலம் போன்றது கழுத்துப் பகுதி. இதில் வெர்டிப்பரேட் எனப்படும் ஏழு சிறு எலும்புகளும் அதைச் சுற்றிச் சதையும் தசைகளும் உண்டு.
நம்மில் பலருக்குக் கழுத்துப்பகுதியில் ஏற்படும் வலி , நமது அன்றாடச் செயல்களைப் பெருமளவிற்குப் பாதிக்கிறது. கழுத்து வலியின் காரணங்களையும் அதைப் போக்கும் எளிய வழிகளையும் தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாகக் கழுத்து எலும்புகள் தேய்ந்து விடுவதால் வலி ஏற்படலாம். இந்த வலி பெரும்பாலும் 45 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும். நமது கழுத்துப் பகுதியில் தலையை ஆட்டும்போது அதாவது ஆம், இல்லை என்று சொல்லும்போது தலை அசைவதற்கான செயல்களைச் செய்கிறது. எனவே கழுத்துப் பகுதி அதிக இயக்கங்களைச் செய்வதால் தேய்மானம் சற்று விரைவாக ஏற்படும். இதனை செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் (cervical spondylosis) என்று கூறுவர். சில நேரங்களில் இது இருப்பவர்க ளுக்கு இடது அல்லது வலதுகை நுனி வரைகூட வலியோ உணர்ச் சியற்ற தன்மையோ ஏற்படலாம். இந்த வகை வலிகளை பிசியோதெரபி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். பின்னர் வலி மீண்டும் ஏற்படாமல் இருக்க சில எளிய உடற்பயிற்சிகள் செய்து வரலாம். Hot packs நல்ல பயனளிக்கும். மேலும், கழுத்துப் பகுதியில் அதிக மாற்றங்கள் ஏற்படாமல் இருக்க collar போட்டுக்கொள்ளலாம் .
கழுத்து வலி ஏற்பட மற்றொரு காரணம், மன அழுத்தம் (stress). மன அழுத்தம் என்றால் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சிந்தனை நம் மனதிற்குள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது என்று பொருள். அவ்வாறு இருக்கையில் அது நம் கழுத்துப் பகுதியை இறுகச் செய்து வலியை ஏற்படுத்தும். இது போன்ற வலிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு ‘இதுவும் கடந்து போகும், கவலைகள் பறந்து போகும்’ என்று உணர வேண்டும். இப்படி நினைப்பதால் ஒரு வகை பாசிட்டிவ் ஆற்றல் கிடைக்கும். இதனால், கழுத்தைச் சுற்றியுள்ள சதைகள் இயல்பாகும்.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இன்றைய நவீன உலகில் கணினியின் துணைகொண்டு பணி செய்பவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பவர்கள் எனச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை கழுத்து வலி ஏற்படுகிறது. கழுத்துப் பகுதியைச் சுற்றி trapezius என்னும் ஒரு சதைப் பகுதி உள்ளது. கணினி முன்பு நீண்ட நேரம் ஓய்வில்லாமல் அமர்ந்தாலும் கழுத்துப் பகுதியை இறுக்கமாக வைத்திருப்பதாலும் இந்தச் சதைப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. எந்த ஒரு சதையாக இருந்தாலும் அது வேலை செய்யும் இடங்களில் தொடர்ந்து குறுகிய நிலையிலோ அல்லது விரிவடைந்த நிலையிலோ நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியாது. அவ்வாறு செய்யும்போது வலி ஏற்படுகிறது என்று பெங்களூருவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவருகிறது.
ஒரு சதைப் பகுதிக்கு அதில் நிர்ணயிக்கப்பட்ட வேலையை விட்டு அதிக வேலையை நீண்ட நேரம் செய்யத் தூண்டும்போது அங்கு வலி ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் பெரும்பாலான வீடுகளில் ஏசி அறையில் அமர்ந்தோ ஏசிக்கு முன்னால் அமர்ந்தோ பணி செய்வதால் கழுத்துப் பகுதி மேலும் குளிர்ச்சியடைந்து வலியை அதிகப்படுத்தலாம்.
மனித உடலில் எந்தவொரு பகுதியிலும் சிறு பாதிப்பு ஏற்பட்டால்கூட அதை நமது உடல் தனாகவே சரிசெய்ய முயலும். ஆனால், ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்கள் சேர்ந்துகொள்ளும்போது சரிசெய்துகொள்வது மிகவும் கடினமாகிவிடுகிறது.
trapezius சதைப் பகுதியைப் போதிய ஓய்வு நேரத்துடன் சுருங்கி விரியச் செய்து கீழ்க்காணும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கழுத்து வலி கண்டிப்பாகக் குறைந்து விடும்.
கழுத்து வலி குறைய:
*கழுத்தைச் சரியாக நிலைப்படுத்துதல். வேலை செய்யும் அலுவலகத்தில் சுழல் நாற்காலிகளைப் (ergonomic chairs) பயன்படுத்த வேண்டும். இந்த நாற்காலியில் நமது முழங்கை மற்றும் முதுகுப் பகுதிகளுக்கு நன்கு ஆதரவாக இருக்குமாறு அமர வேண்டும்.
*நீண்ட நேரம் ஒரே இடத்தில் ஒரே நிலையில் அமராமல் அவ்வப்போது இடமாற்றமும் அமரும் நிலையில் மாற்றமும் செய்துகொள்ள வேண்டும்.
*கணினியின் திரையும் நமது உயரமும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
*நீண்ட நேரம் கணினியின் முன் அமரும் பெரியோர்களும் குழந்தைகளும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறு சிறு பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
சில நேரங்களில் வேலைப்பளு அதிகமாகும் போது இந்தப் பாதுகாப்பு வழிமுறைகளையும் மீறி வலி ஏற்படுமாயின், hot pack வைத்துக்கொள்ளலாம்.