திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் வெடிப்பொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் சேகரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம். இதன்படி, கடந்த 14ஆம் தேதி இரவு எப்போதும் போல குவாரியில் கற்களை சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் இருந்த 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து 400 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் இணைந்து 4 பேரை மீட்டுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவு வெளியாகி உள்ளது. இந்தநிலையில் 3ஆவது நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இன்று 5ஆவது நபரை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.