சென்னை, புறநகர் பகுதிகளில் கள்ளச்சந்தையில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து காவல் ஆய்வாளர் முகேஷ்ராவ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் மற்றும் திருநின்றவூர் ஆகிய இடங்களில் தீவிர சோதனை செய்தபோது, இரண்டு கிடங்குகளில் எவ்வித ஆவணமும் இன்றி கலப்பட எண்ணெய், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 18,200 லிட்டர் கலப்பட எண்ணெய், 1100லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் டீசல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்த திருநெல்வேலி மாவட்டம் குமாரபுரம், வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் சூசை பெனிஸ்டர் (32), தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், முதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.