கர்ப்ப கால சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும்
-டாக்டர் தாரணி
கர்ப்பிணி ஒருவர் உடல் எடை அதிகமாக இருப்பது அவரது வயிற்றில் வளரும் குழந்தையைப் பாதிக்குமா ?
அதிக உடல் எடை தாய், சேய் இருவரையும் பாதிக்கும். தற்கால உணவுப் பழக்கமுறை, பழச்சாறு, ஹெல்த் ட்ரிங்க் என்றழைக்கப்படும் பல பவுடர்களைப் பாலில் கலந்து கர்ப்பிணிகள் குடிப்பதால், தேவையில்லாமல் அதிக எடை போட ஆரம்பிக்கின்றனர். அதிக உடல் எடையால் கர்ப்பகால சர்க்கரை நோய் வர 10 முதல் 15% வாய்ப்புள்ளது. எனவே குழந்தைக்கு அதிக அளவில் தேவைப்படும் புரதச் சத்து மிக்க உணவுப் பண்டங்களை சாப்பிடுவதே நல்லது.
கருவில் இருக்கும் குழந்தையின் உடலில் கொடி சுற்றி இருந்தால் சுகப்பிரசவம் ஆகுமா அல்லது சிசேரியன்தான் செய்ய வேண்டுமா ?
நமது சமுதாயத்தில் கொடி சுற்றி குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை கொண்டே, பல சிசேரியன்கள் நடக்கிறது. ஆனால் 40% குழந்தைகளில், குழந்தையின் ஏதாவது ஒரு உடல் பாகத்தில் கொடி சுற்றியே இருக்கும். மேலும் பேறு காலத்தின் போது, CTG எனப்படும் குழந்தையின் இதயத்தின் ஆரோக்கியம் அறியும் பரிசோதனையை மருத்துவமனையில் தொடர்ந்து கவனித்து வரும்போது, எவ்வித பிரச்னையுமின்றி சுகப்பிரசவம் மேற்கொள்ளலாம். இவ்வாறே எங்கள் மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்கிறோம். எனவே தாங்கள் தாராளமாக சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெறலாம்.
ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டால் அவர் மீண்டும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புள்ளதா ?
ஒருமுறை அல்லது இருமுறை கருச்சிதைவு ஏற்படுவது சகஜம். இது 10% பெண்களுக்கு ஏற்படுகின்றது. ஆனால் இரண்டு முறைக்கு மேல் கருச்சிதைவு உண்டாவது, கருப்பையில் குறைபாடு அல்லது உங்கள் கணவரின் குரோமோசோமில் காணப்படும் குறைபாடு அல்லது வேறு ஏதாவது காரணத்தால்தான். கருச்சிதைவிற்கான கார ணத்தை அறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால் அடுத்த முறை ஆரோக்கியமாக கர்ப்பம் தரிக்கலாம்.
4 மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு நஞ்சுப் பகுதி கீழிறங்கி இருந்தால் பேறு காலம் சிக்கலாக இருக்கும் என்கிறார்களே அது உண்மையா ?
4 மாத கர்ப்பிணிகளுக்கு நஞ்சுப்பகுதி கீழிறங்கி இருப்பதால் அச்சப்படத்தேவையில்லை. குழந்தை வளர வளர நஞ்சுப்பகுதி மேல்நோக்கிச் சென்றுவிடும். எனவே 7 மாதங்களுக்குப்பின் எடுக்கப்படும் ஸ்கேனை வைத்து, எந்த வகையான பிரசவம் என முடிவு செய்யலாம். தற்போது பெட் ரெஸ்ட் தேவையில்லை. அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வரலாம்.
இரட்டைக் குழந்தைகள் பெரும்பாலும் சிசேரியன் மூலம்தான் பிரசவம் நடைபெறுகிறது, சுகப்பிரசவம் சாத்தியமா ?
MCMA என்ற வகையில் குழந்தை, தாயின் வயிற்றில் இருந்தாலோ அல்லது முதல் குழந்தையின் பிட்டப்பகுதி கீழ்நோக்கி இருந்தாலோ சிசேரியன் மூலமே பிரசவம் மேற்கொள்ளப்படும். முதல் குழந்தையின் தலைப்பகுதி கீழ்இருந்தாலோ அல்லது DCDA முறையில் கர்ப்பம் தரித்திருந்தாலோ சுகப்பிரசவம் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம்.
வலியில்லா சுகப்பிரசவம் என்றால் என்ன ?
மேலை நாடுகளைப் போல நமது நாட்டிலும் எபிடூரல் என்று அழைக்கப்படும் வலியில்லாத சுகப்பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரமான பிரசவ அறை, கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் வலியில்லாத சுகப்பிரசவத்தை மேற்கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானது. எங்கள் மருத்துவமனைகளில் இவ்வகையான பிரசவம் மூலம் பலர் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.