பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிற நிறைவான வாழ்க்கை சுவர்ணலதாவுக்கு அமைந்தது. ஆனால், அது மட்டுமே தன்னுடைய அடையாளம் என்று அவர் தன் எல்லையைச் சுருக்கிக் கொள்ள வில்லை. சிறுவயதிலிருந்தே தான் ஈடுபாடு கொண்டிருந்த ஓவியக் கலையைத் திருமணத்து க்குப் பிறகு தொடர்ந்தார். அது அவருக்குத் தேசிய அளவில் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது.
“எனக்குத் திருமணம் ஆன புதிதில் வீடு வாங்கினோம். அந்த வீட்டிற்குத் தேவையான ஓவியங்களை வாங்கக் கூடாது என்று நினைத்து நானே வரைந்தேன். அதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் தங்களுக்கும் தேவைப்படுகிறது என்று கேட்க ஆரம்பித்தார்கள்.அப்படித் தொடங்கியதுதான் என் ஓவியப் பயணம்” என்கிறார் சுவர்ணலதா.
கேரளாவைச் சேர்ந்த இவரது கணவரின் வாடிக்கையாளர் ஒருவர் இவர்களுடைய வீட்டுக்கு வந்தார். சுவர்ணலதா வரைந்த ஓவியங்களை எல்லாம் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார். அந்த ஓவியங்களை வைத்து ஓவியக் கண்காட்சி நடத்தலாமே என்று அவர் சொன்னது சுவர்ணலதாவின் ஓவிய ஆர்வத்தைத் தூண்டியது. இவர் நடத்திய முதல் ஓவியக் கண்காட்சியே மக்கள் மத்தியிலும் மீடியாக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ரவிவர்மாவின் ஓவியத்தையும் தஞ்சாவூர் ஓவியக் கலையையும் கலந்து புதுவிதமான ஓவியப் பாணியை இவர் அறிமுகப்படுத்தினார். அது அவருக்கு வெற்றியைத் தந்தது. பொதுவான ஓவியங்களைவிட, சமூகக் கருத்துச் சொல்லும் ஓவியங்களை வரைய நினைத்தார்.
“டெல்லியில் பேருந்து ஒன்றில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இறந்துபோன நிர்பயா கொலை வழக்குச் சம்பவத்தை மையமாக வைத்து சுமார் 52 ஓவியங்களை வரைந்தேன். அவற்றை டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்தி காட்சிப்படுத்தினேன். அந்த நிகழ்ச்சிக்கு ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்தின் இயக்குநர் டைரக்டர் டேனி பாயல் வந்திருந்தார். அவர் மட்டுமல்ல, கலை இயக்குநர்கள், இயக்குநர்கள் எனப் பலர் வந்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சி மாபெரும் நிகழ்ச்சியாக அமைந்தது. ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படும்போது அந்தப் பெண்ணின் மனநிலையும், அவள் உயிரிழக்கும் முன் எந்த மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என்பதையும் வெளிப்படுத்திய ஓவியங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. இப்பொழுதும் அந்த ஓவியத்தைப் பார்த்தால் வேதனை தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. நான் கண்காட்சி வைத்த ஆண்டில் இந்திய அரசு சாதனைப் பெண்களைத் தேர்வு செய்தபோது, அதில் என் பெயரும் இடம்பெற்றது” என்கிறார் சுவர்ணலதா.
ஓவியம் வரைந்து அதை விற்பனை செய்வது மட்டுமே தன்னுடைய வேலை இல்லை என்கிறார். சமூகப் பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு, சாதி – மதத்தின் பேரால் நடத்தப்படும் வன்முறை, கும்பல் வன்முறை இதுபோன்ற நிகழ்வுகளை மையமாக வைத்தும் இவர் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். புகைப்பிடித்தல், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றை விளக்கும் ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்.
“மக்களிடையே இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்காகத்தான் இதைச் செய்கிறேன். அடுத்ததாக மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் ஜோதிடர்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு கண்காட்சி நடத்தினேன். அதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. 2002இல் நான் முதன் முதலில் நடத்திய ஓவியக் கண்காட்சிக்காக இளம் பெண் சாதனையாளர் விருது கிடைத்தது” என்கிறார் சுவர்ணலதா.
இவர் புத்தகங்களை விரும்பிப் படிப்பார். சில சித்தர்களின் புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் சித்தர்களுக்கும் மூலிகைகளுக்கும் உள்ள தொடர்பு இவரை வியப்படையவைத்தது. மூலிகைகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள அவை உதவின. அதனால், உணவுடன் மூலிகைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்.
“எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் மூலிகைகள் இல்லை. மிகவும் அரிதான மூலிகைககளைத்தான் பயன்படுத்தினேன். தற்போது, மூலிகைகளைக் கொண்டு ஓவியம் வரைய முயன்றுவருகிறேன். அந்தக் காலத்திலேயே சித்தர்கள் எல்லாம் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள். தங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், பிற விலங்குகளிடம் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மூலிகைகளைப் பயன்படுத்தினர். மூலிகைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அதனால்தான் நான் மூலிகை ஓவியத்தைக் கையில் எடுத்துள்ளேன்” என்கிறார் சுவர்ணலதா.
ஆக்கபூர்வமான சிந்தனை குறித்தும் ஓவியம் வரைவது குறித்தும் ஐந்து வகையான புத்தகங்களை கொரோனா காலகட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார். அது குழந்தைகள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
கலை என்பது வியாபாரம் அல்ல என்று சொல்லும் சுவர்ணலதா அந்தக் கலையை விற்க தான் விரும்பவில்லை என்கிறார்.
“இந்த ஓவியக் கலையை நானாகவே கற்றுக்கொண்டேன். அதனாலேயே, ஓவியம் கற்றுக் கொடுக்கும்போது யாரிடமும் நான் பணம் பெறுவதில்லை. மேல்தட்டு மக்களில் இருந்து கீழ்த்தட்டு மக்கள்வரை கலை என்பது எல்லோருக்கும் பொதுவானது. மதம், இனம், ஜாதி, மொழி, ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லாவற்றையும் தாண்டி நிற்பதுதான் கலை. வசதி இல்லாததால்தான் சிலரால் கலைகளைக் கற்றுக்கொள்ள இயலவில்லையே தவிர, மற்றபடி எல்லோருக்கும் கலை ஒன்றுதான். வசதி இல்லாதவர்களைத் தேடித் தேடி நான் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கிறேன்”என்கிறார் சுவர்ணலதா.
திருமணத்திற்குப் பின் பெண்களிடம் உள்ள திறமைகள் காணாமல் போய்விடுகிறது என்று சொல்வது தவறு என்கிறார் இவர்.
“அதுவரை பெற்றோரின் செல்ல மகளாக இருந்தவர்கள் புகுந்த வீட்டிலும் வெளி உலகிலும் பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பார்கள். நல்லது, கெட்டது என எல்லாவிதமான அனுபவங்களும் ஏற்படும். அப்போது அவர்களின் திறமை தானாகவே வெளிப்படும். திறமை என்பது எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர வேண்டியது அவர்களுடைய கடமை. நானும் குடும்பத்தலைவியாக இருந்துகொண்டு நேரம் கிடைக்கும்போது எனக்குப் பிடித்தமான ஓவியப் பணியைச் செய்துவருகிறேன்தானே?” எனக் கேட்கிறார்.
ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் வருகிற வருமானத்தை வைத்து, தான் நடத்திக்கொண்டு இருக்கும் ‘ஏசியன் உமன் ஃபவுண்டேஷன்’ என்னும் டிரஸ்ட் மூலமாக மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். இதன் மூலம் மருத்துவ உதவி, கல்வி உதவி தொடங்கி இன்னும் பல உதவிகளைச் செய்துவருகிறார். அதுமட்டுமல்லாமல், இறந்துபோனவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு நிதி இல்லாமல் தவிப்போருக்குப் பண உதவியும் செய்துவருகிறார்.
“அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சிக்குத் தேவையான உபகரணங் களைக் கொடுத்து நானே நேரில் சென்று இலவசமாக ஓவியப் பயிற்சி அளித்துவருகிறேன். ஓவியத்துக்குத் தேவையான உபகரணங்களை அந்தந்த கம்பெனிகளிடம் பேசி சலுகை விலையில் பெற்று அதை மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துவருகிறேன். என்னால் முடிந்த அளவுக்குத் திருமணத்துக்கான சிறு சிறு உதவிகளையும் செய்துவருகிறேன். ஓவியத்தை வியாபாரமாகப் பார்க்காமல், கொஞ்சம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் அதன் மூலம் பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டும். ஓவியரின் படைப்பு அர்த்தமுள்ளதாகவும் ஒரு புதுமையுடனும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஓவியர்கள் இந்தச் சமூகத்தில் நிலைத்து நிற்க முடியும்” என்று தன் கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஓவியர் சுவர்ணலதா.