நன்றாகப் படிக்கும் மாணவர்களை மேலும் மேலும் மெருகேற்ற நம்மிடையே ஏராள மான
பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், தேர்வில் தோல்வி அடைகிற அல்லது படிப்பில்
மந்தமாக இருக்கிற மாணவர்களுக்காகவே தனி பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார் நளினா
பழனிச்சாமி. அடிப்படையில் வழக்கறிஞரான இவர், தற்போது இதில் முழுமூச்சுடன்
செயல்பட்டுவருகிறார்.
“எனது கணவர் தனியார் பயிற்சிக் கல்லூரியை 25 ஆண்டுகாலமாக நடத்திவருகிறார். நானும்
அதில் வகுப்புகள் எடுப்பேன். மாணவர்களுடைய நினைவுத் திறனை அதிகரிக்க என்ன செய்ய
வேண்டும் என்கிற தேடல் எனக்கு அதிகமாக இருக்கும். மாணவர்கள் படித்தது எல்லாம், தேர்வு
ஹாலில் போய் உட்கார்ந்து கண்ணை மூடினால் கண் முன்னே வர வேண்டும். அதற்கு என்ன
செய்ய வேண்டும் என்கிற தேடலின் விளைவுதான் மூன்றாம் கண்- அதாவது Third eye
Activation. அதைப்பற்றித் தேட ஆரம்பித்தேன். அதன்பின் ஒரு சில முயற்சியும், பயிற்சியும்
கொடுத்து மாணவர்களுக்குச் சோதனை முயற்சியாகப் பாடம் எடுத்தேன். அது வெற்றியைத்
தந்தது” என்கிறார் நளினா.
இதுவரை 50 மாணவர்களுக்கும் மேல் பயிற்சி அளித்துள்ளார். ஆரம்பத்தில் பல
பெற்றோருக்கும் இந்தப் பயிற்சியின்மீது நம்பிக்கை இல்லை. இதெல்லாம் ஏதோ ஏமாற்று
வித்தை என்று நினைத்தனர். அதை மாற்ற நளினா மிகவும் கஷ்டப்பட்டார். இந்தப் பயிற்சி
மூளையோடு நேரடியாகத் தொடர்புடையது என்பதால் தங்களது குழந்தைகளின் மூளைச்
செயல்பட்டால் ஏதும் தவறு நேர்ந்துவிடும் என்றும் பல பெற்றோர் பயந்தனர். ஆனால்,
அதையெல்லாம் தனது பயிற்சியின் மூலம் சரிப்படுத்தினார் நளினா.
“இது மாணவர்களுக்கு ஒரு ஃபவுன்டேஷன் மாதிரி. இதற்கும் வயது வரம்பு உண்டு.
பெண்களுக்கு 6 வயதில் இருந்து 18 வயதுவரை. சிலருக்கு 22 வயது வரைகூட முயற்சி
செய்யலாம். ஆண்களு க்கு 6 வயதில் இருந்து 15 வயது வரைக்கும்தான் அக்டிவேட் ஆகிறது.
அதன்பின் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது ஆண்களுக்கு ஆக்டிவேட் செய்வது
ரொம்பவும் சிரமம். இது எனக்கு ஹாபியா பேஷனா என்று கேட்டால் இதை என்னுடைய
‘விஷன் ஃபார் மிஷன்’ என்று சொல்வேன். இது யாருடைய படிப்பையும் பாதிக்காது. கல்வியில்
முன்னேற்றம்தான் ஏற்படும். என்கிட்ட படித்த ஒரு மாணவி, இங்குள்ள ஊழியர்களிடம்
பேசுவதற்கே ரொம்ப பயப்படுவாள். ஆனால், பயிற்சிக்கு வந்த பிறகு அவளிடம் நல்ல
முன்னேற்றம். 11 போட்டிகளில் கலந்து கொண்டு அவற்றில் 10 போட்டிகளில் அவள் வெற்றி
பெற்றிருக்கிறாள்” என மகிழ்ச்சியோடு சொல்கிறார் நளினா.
“இதில் நிறைய நிலைகள் உண்டு. ஒரு சிலர் கதவுக்கு அந்தப் பக்கம் என்ன நடக்கிறது
என்றுகூடச் சொல்வார்கள். மேலும் ஒரு சிலர் கண்ணைக் கட்டிக்கொண்டு சாலையில் போகும்
வண்டியின் நிறம், எண் முதற்கொண்டு சொல்வார்கள். ஒரு சிலர் ஒருபடி மேலே போய்,
இரண்டாவது மாடியிலோ அல்லது மூன்றாவது மாடியிலோ இருந்துகொண்டு ஒருவரை காரின்
அருகில் நிற்கச்சொல்லி அந்த காரின் நிறம் என்னவென்றுகூடச் சொல்வார்கள். பலர் இதை
வியாபாரமாக்கி, அதை முழுமை அடையாமலேயே விட்டுவிட்டார்கள். அதனால், அவர்கள்
அடிப்படையை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டுவிடுகிறார்கள். ஆனால், அதை எப்படிப்
படிப்புக்கு மாற்றுவது என்று சொல்லிக்கொடுக்கவில்லை. இதுதான் இந்தக் கலை முழுமை
அடையாமல் போனதற்கான ஒரு காரணம். ஒருசிலர் இதை ஆன்மிகப் பயிற்சி என்று
சொல்வதால், அது சாமியார் விவகாரம் என்று மக்கள் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய
நண்பர் ஒருவர் கடவுள் மறுப்பாளர். இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாதவர். அவரிடம்
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்களேன் என்றேன். இதற்காகவே சுமார் 100 கிலோ
மீட்டருக்கும் அப்பால் இருந்து குழந்தையைத் தினமும் பயிற்சிக்கு அழைத்து வந்தார். அதன்
பின்னர்தான் அவர் நம்ப ஆரம்பித்தார். இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று
புரிந்துகொண்டார். நிறைய பேருக்குச் சொல்லிக்கொடுப்பதற்கும் அவர் உதவி செய்தார். இதை
அறிவியல்பூர்வமான கலை என்றுகூடச் சொல்லலாம்.
இந்தக் கலையைக் கற்றுக்கொள்வது என்பது ஒரு வரம். இவர்கள் உணர்வுரீதியாக
உறுதியோடு இருப்பார்கள். லேசில் துவண்டுபோக மாட்டார்கள். அதேபோன்று நல்லது எது
கெட்டது எது என்று அவர்களாகவே உணர்ந்துகொள்வார்கள். அவர்களது நடத்தையில் நல்ல
மாற்றம் இருக்கும். கத்தியைக் கையாள்வதைப் போலத்தான் இந்தக் கலையும். இந்தக்
கலையைத் தவறான செயலுக்குப் பயன்படுத்தினால், கண்டிப்பாக இந்தக் கலை வேலை
செய்யாது. இதைப் பலரும் நோக்கு வர்மம் என்று நினைப்பார்கள். ஏனென்றால் நிறைய
திரைப்படங்களில் அதுபோன்றுதான் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.அதனால்தான்
நம்முடைய பெற்றோரும் பயந்துவிடுகிறார் கள். இதைப் படிப்புடன் தொடர்புபடுத்திப்
பார்ப்பதில்லை. அந்தப் பயத்திலேயே இதை விட்டுவிடுகிறார்கள். இதனால் எந்தவொரு
பாதகமான செயலும் நடக்காது. சாதகமான செயலுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்”
என்கிறார் நளினா.
இருட்டு அறையிலேயும் இதைச் செய்யலாம். முறையான பயிற்சியின் மூலம் எல்லாவற்றையும்
சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் நளினா. பெண்கள் விழிப்புணர்வு கூட்டங்களையும் இவர்
நடத்தியிருக்கிறார். பாலியல் தொந்தரவு குறித்தும், அது சம்பந்தமான கவுன்சிலிங்கும்
கொடுத்திருக்கிறார். மகளிர் தினத்தன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று, சிறந்த பேச்சாளர்
விருதையும் இவர் பெற்றிருக்கிறார். அதேபோன்று வனத்துறையில் பணிபுரியும்
பெண்களுக்கான சிறப்புப் பயிற்சியில், விசாகா கமிட்டியில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய
பயிற்சியையும் அளித்திருக்கிறார். பன்னாட்டு அமைப்பில் சிறந்த கல்வியாளர் விருதையும்
வாங்கியிருக்கிறார்.
“ நான் வழக்கறிஞர் பணியில் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது இந்தக் கல்வியாளர் பணி.
அதனால், கல்வி சம்பந்தப்பட்டதில் பன்னாட்டு அமைப்பில் விருது வாங்கியிருக்கிறேன்.
அதேபோல், வழக்கிறஞர் என்கிற முறையில் பெண்களுக்கான அமைப்பில் விருதுகள்
வாங்கியிருக்கிறேன். மகளிர் மன்றங்களுக்கு ஆலோசனை வழங்கியதில் சிறப்பு விருது
வாங்கியிருக்கிறேன்.
நான் வழக்கறிஞரகவும், ஆசிரியராகவும் பணிபுரிகிறேன். எனக்கு அரசியல் ஈடுபாடும்
இருக்கிறது. யோகா, தியானமும் செய்வேன். பெண்களுக்கு எந்த அளவுக்கு ஆன்மிகத்தில் நல்ல
தகவல் இருக்கிறதோ அதை எடுத்துச்சொல்லி வருகிறேன். மாணவர்களுக்கு ரூபிக் க்யூப் உலக
சாதனைக்காக ஒரு முயற்சிக்காக இலவசமாகச் சொல்லிக்கொடுக்கிறேன். அதை 90
விநாடிக்குள் செய்யும் மாணவர்களுக்கு சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான
ஆயத்தப்பணிகளுக்கான முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறோம். அதற்காக சுமார் 70 மாணவர்கள்
என்னிடம் இலவசமாகக் கற்றுக்கொண்டார்கள். வாட்ஸ் அப் மூலமும் இதைப் பற்றி எடுத்துச்
சொல்லிவருகிறேன். மேலும் கல்வி சார்ந்த, பொதுநலன் சார்ந்த பணிகளையும் நான்
செய்துகொண்டு இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நானும் கணவரும்தான். எங்களுக்கு
குழந்தைகள் கிடையாது. அது ஒரு ஏக்கமாகக்கூட இருந்தது. நமக்கு குழந்தை இருந்திருந்தால்
அவர்களை மட்டும்தான் பார்த்திருப்போம். இப்போது நிறைய குழந்தைகளை நாம் பார்க்க
வேண்டியுள்ளது. குழந்தை இல்லாததைச் சுட்டிக்காட்டி பலர் என்னை மன உளைச்சலுக்கு
ஆளாக்கினார்கள். அதனால், இது ஒரு குறையல்ல. என்னை நானே ஜெயிக்க வேண்டும். ஒரு
குறையை மறைக்க 10 திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.
குழந்தை இல்லாதது ஒரு நீங்காத வடுவானது எனது வாழ்க்கையில். அதனால், அதை
மறைப்பதற்காக எல்லா விதத்திலும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டு அதன் மூலம்
என்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறேன்” என்று புன்னகையோடு
விடைகொடுத்தார் நளினா.