குழந்தைகளுக்கான சூழ்நிலையியல் விருது. கண்டுபிடிப்பாளருக்கான அப்துல் கலாம் விருது.
இப்படிப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் திருவண்ணாமலை மாவட்டத்தின் இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்.
14 வயது சிறுமி வினிஷா, திருவண்ணாமலை எஸ்.கே.வி. வனிதா சர்வதேசப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய தாயும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். வினிஷாவின் தந்தை உமாசங்கர் வர்த்தக ஆலோசகராக இருக்கி றார்.
சின்ன வயதிலேயே சூரிய ஒளி மூலம் செயல்படும் இஸ்திரி வண்டியை வடிவமைத்ததற்காகத்தான் ஸ்வீடன் நாட்டின், குழந்தைகளுக்கான சூழ்நிலையியல் விருது வினிஷாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருது உலக அளவில் பருவநிலையைக் காக்கும் சிறந்த கண்டுபிடிப்புகளைப் படைத்த 12 முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு ஸ்வீடன் நாட்டின் மாணவர் காலநிலை அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் விருதாகும். இந்த விருதில் சுமார் ரூ. 8 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியவையும் அடங்கும்.
சூரிய ஒளி மூலம் செயல்படும் இஸ்திரி வண்டியை வடிவமைப்பது குறித்து வினிஷா சமர்ப்பித்த ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக அவருக்கு கடந்த ஆண்டு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருது வழங்கப்பட்டது.
வினிஷா சிறுவயது முதலே அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தாராம்.ஐந்து வயதில் என் பெற்றோர் வாங்கித் தந்த என்சைக்ளோபீடியா வினால் எனக்கு அறிவியலில் அதிக ஈடுபாடு வந்தது. மேலும் கால நிலை பற்றி அறிந்துகொள்ள எனக்குக் கொள்ளைப் பிரியம்’ எனக் கூறுகிறார் வினிஷா.
சுற்றுச்சூழல் பற்றி கவலைகொள்ளாமல் பலரும் கடந்து செல்லும்போது இந்த உலகை ஒரு சிறுமியின் கண்கள் பார்த்த விதம் வித்தியாசமானது.
வினிஷா பள்ளி முடித்து வீடு திரும்பும்போது வழியில் இஸ்திரி போடுபவர்கள் கரியைக் காய வைத்துக் கொண்டிருந்தார்களாம். மீண்டும் சென்று பார்க்கும்போது கரியைக் குப்பைகளில் கொட்டிக் கொண்டிருந்தார்களாம். .
கரி எரிப்பதனால் வரும் விளைவுகளை அறிந்த வினிஷா அதிர்ந்து போனாராம். கரி எரிப்பதால் வெளியாகும் புகையினால் சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் காடு அழிகிறது. குப்பைகளில் போடுவதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது என அறிந்து அதற்கு விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டாராம் அவர்.
‘இந்தியாவில் மட்டும் தோராயமாக ஒரு கோடி துணி தேய்க்கும் தொழிலைச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு துணி தேய்ப்ப்பவர் ஒரு நாளைக்கு 5 கிலோ நிலக்கரியைச் செலவிடுகிறார். ஒரு நாளைக்கு 5 கோடி கிலோ நிலக்கரி செலவிடப்படுகிறது. இதனைக் குறைக்கவே நான் முற்பட்டேன்’ எனக் கூறுகிறார் வினிஷா.
முயற்சிக்கான இந்தத் தேடலே சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியைக் கண்டுபிடிக்க தனக்கு ஊக்கம் அளித்தது எனச் சொல்கிறார் அவர்.
‘இந்த ஐடியாவைச் செயல்முறையாக உருவாக்குவதற்குப் போதிய பொருள்கள் எனக்கு திருவண்ணாமலையில் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அதனை வாங்க அதிக பணம் தேவைப்பட்டது. ஆனால் விடாது போரிட்டால் வெற்றி உறுதி’ என தனது மன உறுதியை நமக்கும் தருகிறார் வினிஷா.
வினிஷா வடிவமைத்துள்ள சூரிய ஒளி மூலமான இஸ்திரி வண்டியின் மேல் பகுதியில் சூரிய ஒளிக்கான பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேனல்கள் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உருவாக்கி வண்டியிலுள்ள பேட்டரிக்கு அனுப்பும். பேட்டரியில் இருந்து மின்சாரம் இஸ்திரி பெட்டிக்கு வருகிறது. இங்கு மின்சாரத்தை பேட்டரியில் சேமிப்பதால் மழைக்காலங்களிலும் சிறப்பாக இயங்க வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரம் இந்த வண்டி இயங்க முடியும். சூரிய ஒளி இல்லாதபோது இந்த பேட்டரிகளை மின்சாரம் மூலமும், ஜெனரேட்டர் மூலமும் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
‘இந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு எனக்கு இரண்டு மாதங்கள் ஆயின’ என்று கூறுகிறார் வினிஷா. தனது யோசனையைக் கண்டுபிடிப்பாக மாற்ற சுமார் 7 மாதங்கள் கடுமையாக உழைத்தாராம் அவர்.
Motion Sensors மூலம் தானாகவே இயங்கும் Eco Friendly மின்விசிறியையும் கண்டுபிடித்திருக்கிறார் வினிஷா. இந்தக் கண்டுபிடிப்பிற்காக PPTIA பெஸ்ட் வுமன் இன்னோவேட்டர் விருதை 2019இல் பெற்றார் வினிஷா.
இது மட்டுமல்லாது வரைதல், பாடுதல், விசைப்பலகை வாசித்தல், யோகா, புத்தகம் படித்தல் போன்ற பல கலைகளைக் கைவசம் வைத்துள்ளாராம் வினிஷா.
உங்கள் வருங்கால திட்டம் என்ன எனக் கேட்டால், சளிக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். சளி 250 வகையான வைரஸ்களால் ஏற்படுகிறது. ஆகவே இன்று வரை அதற்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. நான் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் வினிஷா.
2021ஆம் ஆண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால் சக்தி புரஸ்கார் விருதுக்காக வினிஷாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 18 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு வழங்கப்படும் விருதில் இது பொதுப்பிரிவினருக்கான உயரிய விருதாகும்.
வயதிற்கும் சாதனைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இடைவிடாத உழைப்பும், மனம் தளராத முயற்சியும் கண்டிப்பாக வெற்றியை ஈட்டித்தரும் என்பதற்கு சிறுமி வினிஷா உமாசங்கர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-இளம் விஞ்ஞானி வினிஷா