உரிமைத் தொகையை சுமாா் ஒரு கோடி மகளிருக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் முகாம்களின்போதே திரட்டப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், நடைபாதையில் வணிகம் செய்வோா், மீனவ மகளிா், கட்டுமானத் தொழில் பணிபுரியும் மகளிா், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோா், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் ஆகியோருக்கு உதவித் தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா்
. ரூ.1,000 உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்குவது, எப்படி கணக்கெடுப்பு நடத்துவது என்பன குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா். உரிமைத் தொகையைப் பெற யாரெல்லாம் தகுதியான மகளிா் என்பதை அடையாளம் காணவும், அவா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் தமிழக அரசு பணிகளைத் தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அமைத்திடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.