வேலூர் மாவட்டம், வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் ஒருங்கிணைந்த இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமை தாங்க, மாநில பொதுச்செயலாளர் சத்திய சீலன் துவக்கி வைத்தார். மத்திய அரசால் பழங்குடியின மக்களுக்கு விகிதாச்சார முறைப்படி வழங்கும் சிறப்புகூறு நிதி, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் சரியான முறையில் செயல்படுத்தப்படாததால் ரூ.927 கோடி மீண்டும் மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதை கண்டித்தும், அந்த நிதியை மீண்டும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆதிதிராவிட மக்களுக்கு மீண்டும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், கிராமங்களில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் வரவு செலவுகளை கணக்கில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், தாட்கோ கடன் வசதி விண்ணப்பித்த 4 ஆண்டுகளுக்கு பின்னர்தான் கடன் வழங்கப்படுகிறது. எனவே, விண்ணப்பித்த உடன் கடன் வழங்க வேண்டும், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, எஸ்.சி., எஸ்.டி., காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.