ஐ.எஸ்., அமைப்பில் இணையவதற்காக லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்ற பெண், பிரிட்டன் பிரதமரிடம் மன்னிப்பு கோரியதோடு, மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த ஷமீமா பேகம். 2015ம் ஆண்டு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய, நாட்டை விட்டு வெளியேறி சிரியாவுக்கு சென்றார். அங்கு சென்று, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்த பேகம், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரையும் திருமணம் முடித்தார். அவருக்கு பிறந்த, மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின், அவரை மீட்ட ராணுவத்தினர், அங்குள்ள அகதிகள் முகாமில், அவரை தங்கவைத்தனர்.
ஐ.எஸ்., அமைப்பில் இருந்து விலகி, இதர மக்களைப் போல் வாழ்க்கையை நடத்த எண்ணும் பேகம், மீண்டும் பிரிட்டனுக்கு நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து வருகிறார். எனினும், அவரின் குடியுரிமையை ரத்து செய்து, பிரிட்டன் அரசு அறிவித்தது. பின், பிரிட்டன் நீதிமன்றங்களிலும் ஷமீமா முறையிட்டார். எனினும், அவரின் கோரிக்கை நீதிமன்றங்களில் நிராகரிப்பட்ட நிலையில், ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ஷமீமா கூறியதாவது:
“நான் இதற்கு முன் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் இன்றுவரை வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பிரிட்டன் பிரதமரிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன்.’ பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட, நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன். நான் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தால், என்னை பிரிட்டனுக்கு அழைத்துச் சென்று, என்னிடம் விசாரணை நடத்துங்கள். நான் ஐ.எஸ்., அமைப்பில் இணைந்து எதையும் செய்யவில்லை என்பது அப்போது தான் உங்களுக்கு புரியவரும் என்று கூறியுளளார் .