கேரளாவில் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்திரி தொழில் செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
திருச்சூர் இரிஞ்சலக்குடாவில் உள்ள கருக்குளங்கரைச் சேர்ந்த மாலேகபரம்பில் அம்பிலி. இவருடைய தந்தை துணிகளுக்கு இஸ்திரி போடும் (ஐரன் ) தொழிலை செய்து வந்துள்ளார். மிகவும் எளிய குடும்பமாக இருந்தாலும் மாலேகபரம்பில் அம்பிலி படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் திடிரென்று அம்பிலியின் தந்தை இறந்துவிட, அவரால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மிகவும் வறுமையில் வாடிய நிலையில் அம்பிலியும் அவரது தாயும் இருந்து வந்துள்ளனர். அவர்களுடைய நிலையை கண்டு கவலையுற்ற அம்பிலி அவருடைய தந்தையின் தொழிலையே செய்யத் தொடங்கியுள்ளார்.
அதோடு படிப்பை தொடர்ந்தால் என்ன என்று யோசனை வர,படிப்பையும் காலிகட் பல்கலை கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் படிக்க தொடங்கியுள்ளார். அதே பல்கலை கழகத்தில் பி.ஏ இளங்கலை மற்றும் எம்.ஏ முதுகலை படிப்பை படித்துள்ளார். இரவில் படிப்பது பகலில் ஐரன் தொழிலை செய்வது இருந்து வந்த அம்பிலி அதில் வரும் வருமானத்தை குடும்பத்திற்கும் படிப்பிற்கும் செலவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மாநில தகுதி தேர்வு (set exam )அறிவிப்பு வெளியான நிலையில், அந்த தேர்வையும் எழுதியுள்ளார். வறுமையிலும் மிக கடினமான சூழலில் படித்து வந்த அம்பிலி தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து அங்குள்ள கிருத்துவ கல்லூரியில் விரிவுரையாளர்பணி கிடைத்து விட, அங்கு சேர்ந்து கொண்டே பி.எச்.டி படித்துள்ளார். அவர் ஒரு விரிவுரையாளராக இருந்தாலும், இஸ்திரி போடும் தொழிலை கைவிடாமல் செய்து வருகிறார். இது குறித்து பேசிய அம்பிலி “என்னுடைய இந்தத் தொழிலை எண்ணி பெருமை அடைகிறேன். இந்த தொழில் தான் எங்களை வாழவைத்தது, என்னை படிக்க வைத்தது. அதனால் இந்தத் தொழிலை எப்போதும் கைவிட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.