ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 43 ரன்னும், ஷெப்பர்ட் 26 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் சார்பில் நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார் தலா 3 விக்கெட்டும், ரபாடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பேர்ஸ்டோவ் 23 ரன்னும், ஷாருக் கான் 19 ரன்னும், ஒரு ரன்னில் கேப்டன் மயங்க் அகர்வாலும், ஷிகர் தவான் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 22 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.