மனதை ஆற்றுப்படுத்துவதால் இசையும் ஒருவகையில் மருத்துவம்தான் என்பார்கள். ஆனால், இந்த மருத்துவரோ இசையைத் தன் அடையாளமாக மாற்றியிருக்கிறார். டாக்டர் ஐக்கி பெர்ரி, தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பாண்டிச்சேரியிலும் பிறகு ஜெர்மனியிலும் படித்தவர் இவர். சொற்களை மூச்சுவிடாமல் அடுக்கிப் பாடும் ராப் பாடல்களில் ஆங்கிலமே கோலோச்சியிருந்த நிலையில் ராப் பாடல்களைத் தமிழில் பாடிய முதல் பெண் இவர்!
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ‘பிரைட் ஆஃப் லவ்’ ஆல்பம்தான் இவரது முதல் தமிழ் ராப். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மையப்படுத்தியும் ராப் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். டி.இமான் இசையில் பிரபுதேவா நடித்த ‘விநோதன்’ படத்தில் இவர் குரல் ஒலித்திருக்கிறது. பாடுவதுடன் நிறுத்திவிடாமல் பாடல்களை எழுதுவதிலும் வல்லவராக இருக்கிறார். ‘கனவோடு மனம் சேர்தல்’ படத்தில் இவர் பாடல் எழுதியுள்ளார்.
பொதுவாகக் கலைஞர்கள் தங்கள் சொந்தப் பெயரை மாற்றிக்கொண்டு புனைபெயரில் வலம்வருவார்கள். பெர்ரியும் பாதி அப்படித்தான். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ஐக்கியா. நண்பர்களும் உறவினர்களும் அதைச் சுருக்கி இவரை ஐக்யா என்று அழைப்பார்கள். இவரது மருத்துவமனையின் பெயர் பெர்ரி க்ளோ. அதனால் இரண்டையும் சேர்த்து ஐக்கி பெர்ரி என்று பெயர் சூட்டிக்கொண்டார்!
டாக்டரா, ராப் பாடகரா எது உங்கள் தேர்வு என்றால் பட்டென்று பதில் வருகிறாது இவரிடமிருந்து. “எட்டு மணி நேர தூக்கம் தவிர மற்ற நேரங்களில் என் வாழ்க்கை மக்களுக்குப் பயன்படும்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு மக்கள் சேவையில் எப்போதும் ஆர்வம் உண்டு. மருத்துவராக இருப்பதால் மக்களுக்குப் பலவற்றைக் கற்றுத்தர முடிகிறது. எனக்குள் இருக்கும் இசைத் திறமைக்குத் தீனிபோடுவது மட்டும்தான் ராப் பாடலின் வேலை! மற்றபடி தற்போது நீலகிரியில் இருக்கும் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தரும் வேலையைச் செய்துவருகிறேன்” என்கிறார் ஐக்கி.
அமெரிக்க பாப் பாடகி கேத்தி பெர்ரியைத் தன் ஆதர்ச பாடகி எனக் குறிப்பிடுகிறார் ஐக்கி. கேத்தரின் எலிசபெத் ஹட்சன் என்கிற தன் பெயரைத்தான் கேத்தி பேர்ரி என அவர் சுருக்கிக்கொண்டுள்ளார். இவரும் பாடல்கள் எழுதுவார். இவரால் ஈர்க்கப்பட்டுத்தான் தன் பெயரையும் அப்படி மாற்றிக்கொண்டார்போல ஐக்கி பெர்ரி. பொதுவாக ராப் பாடல்களில் சொற்களை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், கேத்தி பெர்ரி தெளிவான உச்சரிப்புடன் யாருடையை உணர்வையும் காயப்படுத்தாமல் பாடுவதால் அவரைப் பிடிக்கும் என்று ஐக்கி பெர்ரி சொல்லியிருக்கிறார்.