உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நாவின் தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, அண்டைநாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அது அச்சுறுத்தி வருகிறது. ‘தடைகளையும், எச்சரிக்கையையும் மீறி இப்படித் தொடர்ந்து வடகொரியா ஏவுகணைகளைச் சோதிப்பது வல்லரசு நாடுகளுக்கே கிலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது’ என்கின்றனர் உலக அரசியலாளர்கள். இந்த நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனை தென்கொரியாவின் பாதுகாப்புப் படைப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. இந்த இரு ஏவுகணைகளும் 110 கிலோ மீட்டர் (68 மைல்கள்) தொலைவை சென்று தாக்கியுள்ளது. அதிக அளவாக 25 கி.மீ. (15.5 மைல்கள்) உயரத்திற்கு பறந்து சென்றுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. கடந்த மாதம்தான் கண்டம்விட்டு கண்டம்சென்று தாக்கக்கூடிய அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்து அமெரிக்காவுக்கே அதிர்ச்சி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.