சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே சிறப்பாக தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது. கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18வயதுக்கு மேற்பட்டவர்கள் 92.89 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2ஆவது தவணையாக 79. 39 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். இன்னும் தோராயமாக 2 கோடி மக்களுக்கு 2ஆம் கட்ட தடுப்பூசி போடாமல் இருப்பதால் அவர்களுக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதாக கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். இதனைத்தொடர்ந்து, ஆய்வில் பிரேத பரிசோதனை கூடம் கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அங்கு 1.5 கோடி மதிப்பீட்டில் விரைவில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்படும் என அமைச்சர் கூறினார். மேலும், தமிழகம் முழுவதும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று சிலதினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் நினைவு கூறி, அதன்படி சேலம் மாவட்டத்தில் மாநகராட்சியில் 32 இடமும் நகராட்சி பகுதி 6 இடமும் என 38 நகர்புற சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும், கொரோனா சிறப்பு பணியில் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தற்போது ஏற்படுத்தப்பட உள்ள 708 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தேவைப்படுவதால் ஏற்கனவே பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதியதாக 2004 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர் என்றார். கேரளாவில் பரவும் புதிய தக்காளி வைரஸ் நோயால் யாரும் பீதி அடைய தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.