கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு ஜவுளித்தொழில் துறை அமைப்புகள் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்தநிகழ்வில், பாஜக மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தநிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நிதி அமைச்சர், பருத்தி சார்ந்த ஜவுளித்தொழில் கோவையிலும் சூரத்திலும் அதிகம் நடைபெறுகிறது. எனவே, ஜவுளித்துறையின் பிரச்னையை ஒரேகுரலாக அரசுக்கு சொல்லுங்கள். அனுபவசாலிகளான நீங்கள் நடைமுறை சாத்தியத்துடன் உங்களுடைய கோரிக்கைகளுக்கான தீர்வுடன் பிரச்னையை சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அமைச்சர் உறுதியளித்தார். நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நாம் உழைத்து முன்னேறும்போது பாரத நாட்டையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஜவுளித்துறையை முன்னேற்ற முயற்சிக்க வேண்டும். பருத்திக்கான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து நான் அறிந்திருக்கிறேன் இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு கட்டாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார். தொழில் மூலமாக தான் நாடு முன்னேறும் என்பதை பிரதமர் கூறிக்கொண்டே இருப்பார். அதற்கான பணியை செய்து கொண்டே இருக்கிறோம். நம்முடைய நாட்டில் தொழில் வாழ வேண்டும். பயத்துடன் நீங்கள் தொழில் செய்ய வேண்டாம். அரசின் மீது நம்பிக்கை வைத்து உறுதியோடு தொழில்களை முன்னெடுங்கள் இந்த அரசு உங்களோடு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்’ என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.