தேடப்படும் சாமியார் நித்தியானந்தா சர்ச்சைகளுக்கு எப்போதும் குறைவில்லாதவர் என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு குஜராத் மற்றும் கர்நாடக காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர், அங்கு கைலாசா என்ற நாட்டையே உருவாக்கி வாழ்ந்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பக்தர்களுக்கும் கைலாசாவுக்கு வர அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில், நித்தியானந்தாவை காவல்துறையினர் தேடி வந்தாலும், சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை பதிவிட்டு தனது பக்தர்களுடன் உரையாற்றி வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் சாமியார் நித்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாக பரவியது. இந்தநிலையில், தனது உடல் நிலைக்குறித்து பரப்பப்பட்டு வரும் தகவல்கள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் உயிரிழக்கவில்லை, கோமாவிலும் இல்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். எனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.