தி.நகர், தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்த கலா (வயது 48): ஒவ்வொரு தேர்தலுக்கும் தவறாமல் ஓட்டுப் போட்டுவருகிறேன். நான் இதுவரைக்கும் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போட்டிருக்கிறேன். அம்மா இருந்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்தார்கள். அம்மாவின் இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு நல்லதையே செய்துவருகிறார். தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லா நலத்திட்டங்களையும் செய்துகொடுக்கிறார்கள். வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார்கள். அதனால், எனது ஓட்டு மீண்டும் இரட்டை இலைக்குத்தான்.
Lll
பூ வியாபாரம் செய்யும் கோவிந்தம்மாள் (வயது 48): 18 வயதில் இருந்து ஓட்டுப் போடுகிறேன். ஒருமுறைகூடத் தவறாமல் ஓட்டுப் போட்டுவருகிறேன். எந்தத் தலைவராவது நல்லது செய்துவிடமாட்டாரா என்று ஒவ்வொரு தேர்தலிலும் எனது கடமையைச் செய்துவருகிறேன். ஆனால், எந்தத் தலைவரும் நல்லதைச் செய்தபாடில்லை. அவரவர் பொண்டாட்டி, பிள்ளைகளுக்குத்தான் நல்லது செய்துகொண்டு காசு, பணம் சம்பாதித்துக்கொள்கிறார்கள். யாரும் பொதுமக்களுக்கு நல்லது செய்தபாடில்லை. கொரோனா காலத்தில்கூட யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. யாரும் கண்டுக்கவே இல்லை. அதனால், இந்த முறை யாருக்கும் ஓட்டுப்போடுவதாக இல்லை.
lll
பூ விற்பனை செய்யும் கஸ்தூரி (வயது 50): ஒவ்வொரு தேர்தலுக்கும் கண்டிப்பாக ஓட்டுப்போட்டுவிடுவேன். ஓட்டுப் போடும் நாளன்று என்ன தோணுதோ அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு வேன். யார் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கும், கூலி தொழில் செய்பவர்களுக்கும் நல்லது செய்தால்போதும்.
lll
பழ வியாபாரி பரிமளா (21 வயது): நான் ஓட்டுப்போடப்போகும் இரண்டாவது தேர்தல் இது. எனக்கு கலைஞரை ரொம்பப் பிடிக்கும். அதனால் நான் எப்பொழுது ஓட்டுப் போட்டாலும் தி.மு.க.வுக்குத்தான் போடுவேன். இப்போது கலைஞர் இல்லை. இருந்தாலும் அவரது மகன் ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன். எனது ஓட்டு தி.மு.க.வுக்குத்தான்.
lll
புனிதா (வயது 23), பழ வியாபாரி: இதுவரை 2 முறை ஓட்டுப் போட்டிருக்கிறேன். இரண்டு முறையுமே நான் ஓட்டுப் போட்ட கட்சியே ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த முறையும் அவர்களுக்கே எனது ஓட்டு. அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி சிறந்த முறையில் ஆட்சி செய்கிறார். டிடிவி தினகரன், எடப்பாடி இரண்டு பேரும் அம்மாவை முன்னிலைப்படுத்தித்தான் அரசியல் செய்கிறார்கள். இருந்தாலும் இப்பொழுது ஆட்சியும் அதிகாரமும் எடப்பாடி வசம் இருக்கிறது. அவர் நல்லமுறையில்தான் ஆட்சி செய்கிறார். அதனால், இந்த முறையும் எனது ஓட்டு இரட்டை இலைக்குத்தான்.
lll
பழ வியாபாரி கங்கா (வயது 75: வாக்களிப்பது நமது கடமை. அதை யாருக்காகவும், எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை. அதனால், ஒவ்வொரு தேர்தலின்போதும், கண்டிப் பாக ஓட்டுப் போடுவேன். நான் முதன் முதலில் ஓட்டுப் போட்டது தி.மு.க.வுக்குத்தான். அப்போது அண்ணாதுரை முதல்வராக இருந்தார். அதிலிருந்து இதுநாள் வரைக்கும் எப்ப தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்குத்தான் எனது ஓட்டு. ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனது ஓட்டு தி.மு.க.வுக்குத்தான். இப்பொழுது கலைஞர் இல்லை. இருந்தாலும், அவரது வாரிசு ஸ்டாலின் இருக்கிறார். ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கலைஞருக்கு இருந்ததுபோல் அவரது மகன் ஸ்டாலினுக்கு இருக்காதா என்ன? இவரும் நல்லதே செய்வார். நான் உதவி என்று இதுவரைக்கும் கலைஞரைப் போய்ப் பார்த்ததில்லை. உதவி என்று போனவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்திருக்கிறார். எனது ஓட்டு கண்டிப்பாக தி.மு.க.வுக்குத்தான்.
lll
கல்லூரி மாணவி உமாமகேஸ்வரி (20 வயது): ஏழை, பணக்காரர் என்று இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற மாதிரியான ஒரு நல்லாட்சியைக் கொடுக்க நினைக்கும், கிராமப்புறங்களை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்கிறவர்கள் குறிப்பாக இளைய தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லா இருக்கும். நாம் தேர்ந்தெடுக்கிறவர்கள் நல்லது செய்ய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் ஓட்டுப் போடுகிறோம்.
lll
அமராவதி (வயது 35), குடும்பத் தலைவி: வர்ற தலைவர்கள் யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று எண்ணி மனசாட்சிப்படி ஓட்டுப் போடும் நமது கடமையை நாம் தவறாமல் செய்கிறோம். ஆனால், யாரும் நல்லதே செய்வதில்லை. ஆட்சிக்கு வரும் தலைவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்தால்போதும். பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வரும் ஆட்சியாளர்கள் அதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.
lll
நிர்மலா (33 வயது), பட்டதாரி: நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். ஆனால், யாரும் சொன்னதைச் செய்யவில்லை. ஓட்டுப் போடுவது நமது கடமை என்று நாம் ஒவ்வொரு முறையும் போய் ஓட்டுப் போடுகிறோம். ஆனால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆட்சிக்கு வருகிறவர்கள்தான் சம்பாதிக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. அதுவும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இல்லவே இல்லை. அதனால், இந்த முறை யாராவது சுயேட்சைக்கு அல்லது நோட்டாவுக்குப் போட வேண்டியதுதான்.
lll
உமா (வயது 23), ஐ.டி. தொழிலாளி: இந்தத் தேர்தல்தான் நான் முதன் முதலாக வாக்களிக்கப்போகும் தேர்தல். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. எனது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தி.மு.க. விசுவாசிகள். அதனால், நானும் தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.
lll
சின்னம்மாள் (60 வயது) : என் கணவர் தி.மு.க. ஆதரவாளர். எனக்குத் திருமணம் ஆனதில் இருந்து ஒவ்வொரு தேர்தலின்போதும், தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுப் போடுகிறேன். எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தது, எங்க பகுதியில் மருத்துவமனை, சத்திரம், பள்ளிக்கட்டிடம், கழிப்பிடம் ஆகியவற்றை தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் கட்டிக்கொடுத்தார்கள். அதனால், எனது ஓட்டு தி.மு.க.வுக்குத்தான்.
lll
குடும்பத்தலைவி சரிதா (வயது 37): தேர்தல் நேரத்தில் மட்டும் புதுசு, புதுசா பல கட்சித்தலைவர்கள் எங்கள் ஏரியாவுக்கு வருகிறார்கள். ஏதாவது ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அதோடு சரி. அதன்பின் இந்தப் பக்கமே வருவதில்லை. காலங்காலமாக தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுப் போடுகிறேன். அதனால், இந்த முறையும் தி.மு.க.வுக்குத்தான் எனது ஓட்டு.
lll
திருமகள் (39 வயது): ஜெயலலிதா அம்மா இருந்ததில் இருந்தே நான் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்த முறையும் இரட்டை இலைக்குத்தான். அ.தி.மு.க. சார்பில் ரோடு போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இந்த முறையும் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகிறேன். அதனால், இந்த முறையும் இரட்டை இலைக்கே எனது வாக்கு.