பி.ராஜேஸ்வரி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கும் கால்பிரவு ஊராட்சி மன்றத் தலைவி. சமீபத்தில் ஆதிக்க சாதி உறுப்பினர்களின் நெருக்கடி தாங்காமல் பதவி விலகவும் அவர் தயார் ஆனார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவி, மன்றக் கூட்டங்களின்போது கீழே அமரவைக்கப்பட்டார். அவர் பெயரும் ராஜேஸ்வரிதான். அந்தச் செய்தி நாட்டையே அசைத்துப் பார்த்தது.
இவர்கள் அனுபவிப்பது…
உதாசீனம். அவமானம். அடக்குமுறை. ஒடுக்குமுறை. மிரட்டல்.
இதற்குக் காரணம்….
அவர்கள் பெண்கள் என்பது மட்டுமா? இல்லை. அவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் அவர்களுக்கு எதிராக ஆணவச் சாதியினர் அதிகாரத்தையும் அவமானத்தையும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.
இவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல ஊராட்சிகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்த உறுப்பினர்களால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இதை எந்த அரசாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
’ஊராட்சித் தலைவர் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியும், எனக்கு எந்த அதிகாரமும் கிடைக்கலைங்க. அலுவலக சாவிகூட கொடுக்கலைங்க. செக் புக்கூட எனக்குத் தரலை. இந்த ஊராட்சியில் இருக்கும் துணைத் தலைவர் நாகராஜனின் நெருக்கடி என்னைப் பதவியில் இருக்க விடாமல் துரத்துதுங்க’ என்று துயருடன் கூறுகிறார் கால்பிரவு பி.ராஜேஸ்வரி.
44 வயதான பி.ராஜேஸ்வரி எட்டாவது படித்திருக்கிறார். அவருடைய கணவர் பாண்டி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த விபத்தில் காயம் அடைந்து அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். ராஜேஸ்வரியின் மூத்த மகள் எம்.எஸ்.சி. முடித்திருக்கிறார். இரண்டாவது மகள் பி.பி.ஏ. முடித்திருக்கிறார். அரசுப் பணிக்காகப் பயிற்சி எடுத்துவருகிறார்கள் இருவரும். மூத்த மகன் ஐ.டி. முடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுகிறார். அவரும் அரசுப் பணிக்கு முயன்று வருகிறார்.
பெண் என்ற காரணத்திற்காக மட்டும் இல்லாமல் ஒரு பட்டியல் இனப் பெண் என்பதால் எல்லா அதிகாரத்தையும் ஆதிக்க சாதி உறுப்பினர்களே வைத்துக்கொள்ள முயல்கிறார்கள் என்கிறார் பி.ராஜேஸ்வரி. அடக்குமுறையை எதிர்த்து அவரால் புகாரும் தர முடியவில்லையாம்.
’நீ எங்கே புகார் கொடுத்தாலும் ஒன்னும் நடக்காது. மேலே இருக்கறவங்களே எங்க ஆளுங்கதான் என்று சொல்கிறார்கள்’ என்று கண் கலங்குகிறார் பி.ராஜேஸ்வரி.
’நான் சொல்வதைத்தான் நீ செய்யணும்னு மிரட்டினார் நாகராஜன். மக்களுக்குச் சேவை செய்ய வந்த நான் அவர்களின் பேச்சைக் கேட்க மாட்டேன் என்று சொன்னால் ராஜினாமா செய்துவிடு என்று கூறுகிறார்கள்’ என்று கூறுகிறார் பி.ராஜேஸ்வரி.
உரிமைகளைக் கேட்டால் வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார்கள் என்று சோர்வடைகிறார் பி.ராஜேஸ்வரி.
‘நாட்டுக்கு எப்போதோ சுதந்திரம் கிடைத்துவிட்டது. எங்க ஊரின் அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று குமுறுகிறார் அவர்.
சமரசத்திற்காக மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில் முயற்சிகள் நடக்கின்றனவாம்.
’போராடி இதை மாற்ற முனைகிறோம்’ என்று நம்பிக்கை காட்டுகிறார் பி.ராஜேஸ்வரி. ’ஊடகங்கள் ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று நெகிழ்கிறார் அவர்.
கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரியும் கடும் வேதனைகளை அனுபவித்து வருகிறார். மன்றக் கூட்டங்களின்போது அவர் கீழே அமர வைக்கப்பட்டார். அது நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அதிர்ச்சி அலைகளை அது ஏற்படுத்தியது.
சுதந்திர தினத்தன்றும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவர் மோகன்ராஜ்தான் கொடி ஏற்றினார்.
ஊராட்சி மன்றத் தலைவியாக இருந்தாலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் எப்போதும் அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று மனம் வருந்துகிறார் தெற்குதிட்டை ராஜேஸ்வரி.
37 வயதான ராஜேஸ்வரி ஐந்தாம் வகுப்பு படித்திருக்கிறார். அவருடைய கணவர் சரவணன் வாடகைக் கார் ஓட்டுகிறார். அவருடைய மகன் பதினோராவது படிக்கிறார். மகள் ஒன்பதாவது படிக்கிறார்.
காசோலையில் கையோப்பம் இடும் அதிகாரமும் தனக்கு இருக்கிறது என்று தெற்கு திட்டை ராஜேஸ்வரி கூறுகிறார். அதையும் தாங்களே செய்துகொள்வார்கள் என்று ஆதிக்க சாதி துணைத்தலைவர் கூறுகிறாராம்.
ராஜேஸ்வரியைக் கீழே அமரவைத்தது, கொடியை ஏற்றவிடாமல் செய்தது யார் என்ற சர்ச்சையில் கட்சி அரசியலும் எட்டிப் பார்த்தது. அதிமுககாரர் செய்தாரா, திமுககாரர் செய்தாரா என்று அரசியல் கட்சிகள் கருத்து மோதலை வைத்தன.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஊராட்சிகளில் சாதி வேறுபாடுதான் எப்போதும் ஆட்சி செலுத்துகிறது.
‘வரும் காலத்தில் மதிப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியாது. ஆனால் மக்கள் வாக்களித்தார்கள். அவர்களுக்கு நன்மை செய்துவிட்டுப் போனால் போதும். அதனால் அத்தனை அவமானங்களையும் அனுசரித்துப் போக நினைக்கிறேன்’ என்று கூறுகிறார் தெற்கு திட்டை ராஜேஸ்வரி.
ஊர் மக்கள் தன்னை மதிப்பதுதான் நம்பிக்கை தருகிறது என்று சொல்கிறார் அவர்.
மக்கள் பணியாற்றுவதற்காகப் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆனாலும் அவமானங்களைச் சகித்துக்கொண்டு போகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமிர்தம் அம்மாள் என்ற ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு எதிர்ப்பு வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.
மதுரை மாவட்டம் மேலக்கால் ஊராட்சியின் பெண் தலைவர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த தான் பணி செய்யவிடாமல் இடையூறுகள் வலுப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்.
நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊராட்சி மன்றங்களில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வந்துவிட்டது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு திறம்படச் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் பெண்கள் பணி செய்ய விடாமல் ஆதிக்க சாதியினர் தடைகளைப் போட்டு வருகிறார்கள்.
தங்கள் சொல்தான் அதிகாரம் பெற வேண்டும் என்ற மனநிலை ஆதிக்க சாதியினர் இடையே மேலோங்கி இருக்கிறது. மேல், கீழ் என்ற மன நிலை மாறுவதற்கு அரசாங்கங்கள் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். சட்டங்களை முறையாகக் கடைப்பிடித்தாலே மக்கள் சேவைக்காக முன்வரும் பட்டியலினப் பெண்கள் முனைப்புடன் செயல்பட வழி வகுக்கும்.
இதற்கு எல்லோரும் விழித்துக்கொள் ளத்தான் வேண்டும்.