நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசி உதகையில் தற்போது கோடை சீசன் கலைகட்டத்தொடங்கி உள்ளது. கோடைக்காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக உதகையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை காரணமாக தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் உதகைக்கு வந்துள்ளனர். இதனால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டும் ரசித்தும் பச்சைபசேலென காணப்படும் புல்வெளியில் குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பூத்துக்குலுங்கும் மலர்களுக்கு நடுவே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதில் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இந்தநிலையில், நேற்று மட்டும் உதகை அரசு தாவரவியல் பூங்காவை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.