பெண்கள் தமது உரிமைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர் . பல துறைகளில் பெண்களுக்கான முன்னுரிமை, சமத்துவம் மறுக்கப்படுகிறது .அந்த வகையில் விவசாயமும் ஆண்மைப்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 75% கிராமப்புறப் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. 75% பெண்கள் விவசாயத் தொழில் செய்தாலும் 12% நிலங்கள் மட்டுமே பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலே அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல, எந்த விதைகளை வாங்க வேண்டும், எத்தகைய பயிர்களை விளைவிக்க வேண்டும், என்ற விவசாயம் சார்ந்த தொழில்த்துறை சார்ந்த முடிவுகளை எடுப்பது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். முடிவு எடுப்பதில் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் .நிலமற்ற ஏழைப் பெண்கள் விதைத்தல், களை எடுத்தல் என விவசாயத்தின் ஆணி வேராக இருக்கும் பணிகளை மேற்கொண்டுவந்தனர். ஆனால் தற்கால எந்திரமயமாக்கல் பெண்களுக்கான வேலைகளையும் பறிக்க ஆரம்பித்திருக்கிறது .நில உரிமை கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் அட்டை ,பயிர்க்காப்பீடு ,சந்தைக் கடன்கள்,விதைகள் மற்றும் உரங்களைப் பெறமுடியும் .
ஆண்கள் நகர்ப்புறங்களுக்கு வேலை தேடிச் செல்வதால் விவசாயத்தில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாக 2018க்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. சில பெண் விவசாயிகள் நிலத்தை குத்தைகைக்கு எடுத்து பண்படுத்தி விவசாயத்தைச் செய்தால் இரண்டு ஆண்டுகளில் நிலத்தை திரும்பி எடுத்துக் கொள்வதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் .முன்பு இருப்பது போல் மழைப்பொழிவு இருப்பதில்லை .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி அதிகரித்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்தது. அத்தகைய சூழ்நிலைகளில் பெண் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர் தற்கால பருவ நிலை மாறுபாடு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பயிரிடுவதில் சிக்கல்கள் எழுகிறது. அவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை அரசு மேற்கொண்டு எந்தந்த பயிர்கள் மாற்றாகப் பயிரிட முடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்குதல் அவசியம். தந்தையின் சொத்தில் பங்கு பெறும் உரிமையைப் பெண்கள் பெற்றிருந்தாலும் வேறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்யும்போது தங்களின் உரிமையை அவர்கள் இழக்கின்றனர் . இவ்வாறு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் பெண் விவசாயிகளின் உரிமைக்கான குரல்கள் குறைவாகத்தான் ஒலிக்கிறது.