வருடா வருடம் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜானைக் கொண்டாடுகிறோமோ இல்லையோ நாட்டையே உலுக்கும் கொலைகளைப் பற்றியும் தற்கொலைகளைப் பற்றியும் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நீதி மன்றங்களில் நீதி ஓங்கி நிற்கிறதோ இல்லையோ #justicefor என்ற Hashtag மட்டும் எப்போதும் முதல் இடத்தில இருக்கிறது. பெண்ணுக்கு எதிரான அநீதி நடக்கும்போதெல்லாம் நாமும் சமூக வலைத்தளங்களில் வழக்கறிஞர்களாய் மாறி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பலன் இல்லை. #justicefor என்ற hashtag-க்குப் பின்னால் வரும் பெயர் மாறுகிறதே ஒழிய justice got என்று மகிழ முடிவதில்லை.
பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்படுகிற ஐந்து அல்லது ஆறு குற்றங்களை மட்டும் கணக்கில் வைத்து, 365 நாட்களில் இவை மட்டும்தான் நிகழ்ந்தனவா என்றால், இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆழ்கடலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிப்பிகளில் வெகு சில சிப்பிகளில் மட்டுமே முத்து இருப்பது போல வெகு சில நிகழ்வுகளே மக்களை அடைகின்றன. சில பாவக்கதைகள் காவல் நிலையங்களிலேயே அடித்து விரட்டப்படுகின்றன. சில பாவக்கதைகள் காவல் நிலையங்களை அணுகவே அஞ்சுகின்றன.
காதலை மறுத்ததால் நிகழ்ந்த கொடூரங்களும், வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வஞ்சக செய்திகளும் இல்லாமல் நாளிதழ்கள் வருவதில்லை. காதலை மறுத்ததால் வெட்டிக் கொலை, காதலித்துப் பிடிக்கவில்லை என்று விலகியதால் அமில வீச்சு, திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஏமாற்றி வல்லுறவு செய்து கொலை… இப்படிப் பல செய்திகள். இதுபோன்ற செய்திகளைப் படிக்கையில் சமூகத்தின்மீதான வெறுப்பு அதிகரிக்கிறது. விலங்குகள் மத்தியில் வாழ்வதுபோன்ற எண்ணம் தோன்றுகிறது என நினைக்கலாம். அது தவறு. காரணம், எந்த விலங்கும் தன் இணையை இப்படித் துன்புறுத்தாது, வல்லுறவு செய்யாது.
சமீபத்தில் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நிகழ்த்த அநீதியைச் செய்தி ஊடகங்கள் பெரிதாக வெளியில் காட்டவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் போராளிகள் அதற்காகக் குரல் எழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். நர்சிங் படித்துக்கொண்டிருந்த 18 வயதான அந்தப் பெண்ணிற்கு நிகழ்ந்தது என்ன? மூன்று ஆண்கள் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை எந்த ஊடகமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை .
உண்மையில் நிகழ்ந்தது என்ன?
அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக இளைஞர் ஒருவர் அவரிடம் கூறியிருக்கிறார். அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று அந்தப் பெண் சொன்ன பிறகும் அந்த இளைஞர் தினமும் பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்துள்ளார். கடைசிவரை அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளாததால் அந்த இளைஞரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று அவர் வீட்டு வாசலில் எரித்துள்ளனர். இந்தச் செய்தியை ஏன் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை? அதற்கும் காரணம் உண்டு. சிலர் இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணும் அந்த இளைஞரைக் காதலித்ததாகவும் பின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்காததால் அவரை ஒதுக்கியதாகவும் அதனால்தான் அந்த இளைஞர்கள் சரஸ்வதியைக் கொன்றதாகவும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி, ஓர் ஆண் ஒரு பெண்ணை இப்படி விட்டுச் சென்றால் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ஒரு பெண் ஆணை விட்டுச் சென்றால் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்று சில ‘அருமையான’ கேள்விகளை முன்வைக்கின்றனர். உண்மையில் காதலன் விட்டுச் சென்றால் எந்தப் பெண்ணும் கொலை செய்வதோ , அமிலம் வீசுவதோ இல்லை. முறையாக நீதிமன்றத்தையே நாடுகின்றனர். அவர்கள் மிகச் சிலர்தான். பெரும்பாலான பெண்கள், குடும்ப மானம், கௌரவம் என்று நீதி கேட்கவும் பயந்து அடங்கிப்போகின்றனர். தனக்குப் பிடிக்காதவனை விட்டு ஒரு பெண் விலகினாலோ வேறு ஒருவனைக் காதலித்தாலோ இந்தச் சமூகம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. உடனே அவளது நடத்தையைக் கேள்வி கேட்கின்றனர்.
இந்தச் சம்பவத்தை நாம் இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். கொலை செய்யபட்ட பெண் இடைநிலை சாதியைச் சேர்ந்த வர் என்பதாலும் கொலை செய்தவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும்தான் இந்த நிகழ்வு வெளிவரவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டிலும் இன்னும் இது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டு இருப்பது கவலையாக இருக்கிறது. அதிலும், சாதி, மதம், இனம் போன்றவை தலைதூக்குவது இன்னும் பதற்றத்தைக் கூட்டுகிறது.
எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள் என எவராக இருந்தாலும் அவருக்கெதிராக அநீதிகள் நடக்கையில் அதை எதிர்க்க வேண்டும். அதனைக் குறைக்க முற்பட வேண்டும். எல்லோருக்கும் இப்புவியில் இன்பமாய், சுதந்திரமாய் வாழ உரிமை உண்டு. அந்தச் சுதந்திரம் அடுத்தவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். தற்கொலைகள் அற்ற, கொலைகள் அற்ற, வன்முறைகள் அற்ற அழகிய இரண்டாம் உலகத்தைப் படைப்போம்!