ரஷ்யா – உக்ரைன் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் போரைக் கைவிட உலக நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. என்றாலும், அந்நாடுகள் நடத்திய சுமூகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், சில நாட்கள் தற்காலிகமாக போரை நிறுத்திவைத்திருந்த ரஷ்யா, மீண்டும் தாக்குதலை தொடுத்துள்ளது. கருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பயங்கரமான போர்க் கப்பலான மாஸ்க்வாவை இழந்ததுதான் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் ரஷ்யா மீண்டும் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், உக்ரைனின் எல்லையில் ரஷ்யாவின் அணுஆயுத போர் விமானங்கள் பறந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, TU-160 அணுஆயுத போர் விமானம் பறந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் எல்லைப் பகுதியான கலுகா பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.