தமிழக சட்டப்பேரவையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் வீணானது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில், நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 70,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேதமடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும், நெல்லை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார். கோடைகால தொடர் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.