15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 73ஆவது ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இந்தப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் அணி பந்து வீச்சில் தனது ஆட்டத்தை தொடங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. இந்த தகுதி சுற்று போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதி சுற்றுக்கு இரண்டாவது அணியாக தேர்வு செய்யப்படும் என்பதால், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப்போட்டியில் ஜோஸ் பட்லர் 60 ரன்களில் 106 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்தத்தொடரில் இது ஜோஸ் பட்டலரின் 4ஆவது சதமாகும். இதன்மூலம், இந்தத்தொடரின் அறிமுக அணியான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி 2ஆவது முறையாக இந்தத்தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்றுமா அல்லது அறிமுக ஆட்டத்திலேயே இறுதி சுற்றுக்கு வந்துள்ள குஜராத் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பில் ஐ.பி.எல்., ரசிகர்கள் நாளைய போட்டிக்காக காத்திருக்கின்றனர்.