திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். அவர் சிறுநீரக தொற்று காரணமாக நேற்று இறந்த விட்டார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து வந்தனர். மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் உறவினர்கள், அவரது உடலை டோலி கட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மலை கிராமத்தில் அடக்கம் செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 7 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் தற்காலிக சாலை அமைத்து சென்று வந்தனர். அந்த சாலை கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டிற்கும் மேலாக சாலை வசதி இல்லாத மலை கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சாலை வசதி கேட்டு பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசுக்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை