சூரியனின் கருந்துகள் பரப்பில் உருவாகும் பிரமாண்ட வெப்ப புயல், பூமி மற்றும் இதர கோள்களை நோக்கி கதிர்வீச்சுகளை வெளியேற்றும். இது, புவிகாந்த புயலாக மாறி பூமியை தாக்கும். ‘இந்தப் புயல் இன்று பூமியை தாக்கக்கூடும்’ என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சி.இ.எஸ்.எஸ்.ஐ., எனப்படும் இந்திய விண்வெளி சிறப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் இந்த புவிகாந்த புயல் வினாடிக்கு, 429 – 575 கி.மீ., வேகத்தில் பயணித்து பூமியை இன்று தாக்க அதிக வாய்ப்புள்ளது. இது, மின் தொகுதிகளை பாதிக்கும் என்றும், எனவே உலகின் பல்வேறு பகுதிகளில் மின் சேவை துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும், உயரமான மலைப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. புவிகாந்த புயல்களின் வேகத்தை, ‘ஜி – 1’ முதல் ‘ஜி – 5’ வரை விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். இன்று தாக்கவுள்ள சூரியப் புயலின் வேகம் ஜி – 2 வகையைச் சார்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.