நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அச்சனக்கல் பகுதியை சோ்ந்தவா் ரவீந்திரநாத். இவர் இந்திய ராணுவ மருத்துவமனையில் தொழில் நுட்ப நிபுணராக 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ள இவர் ராணுவத்தின் மீது அதிக பற்று கொண்டதால் தனது மகள் மீராவையும்(23) தன்னை போலவே இராணுவத்தில் சேர்க்க ஆசைபட்டு வந்தார். அதனால், தான் பணி மாறுதல் செல்லும் ஊா்களுக்கு அழைத்து சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்தார். பள்ளி படிப்பை முடித்த மீரா பின்னர் கோவையில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்ததுடன் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று எண்ணி கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவ பணிகளுக்கான தோ்வினை எழுதினார். அதில் மீரா கப்பல் படை பிரிவில் தோ்ச்சி பெற்றார். இதைத்தொடா்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத்தளத்தில் 6 மாதம் பயிற்சி பெற்று வந்தார். பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து விரைவில் கப்பல் படையில் சப் லெப்டினெண்ட் அதிகாரியாக பொறுப்பு ஏற்க உள்ளார். இதனால் இந்திய கப்பல் படை அதிகாரியாக தேர்வாகி உள்ள முதல் படுகர் இன பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராணுவ பணி என்றாலே அதில் பெண்களுக்கு அதிகளவில் விருப்பம் இருக்காது என்பதும், குறிப்பாக நீலகிரி போன்ற மலை மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்காது என்பதை தகர்த்து படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவை படுகர் இன மக்கள் மட்டுமின்றி மலை மாவட்ட மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் கிராமத்து பெரியோர்களும் வீடு தேடி சென்று வாழ்த்தி வருகின்றனர்.