இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி வாயிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும், ரஷ்யா –உக்ரைன் விவகாரம், இந்தோ –பசுபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொண்டனர். உக்ரைன் நாட்டின் புச்சா நகரின் மீதான தாக்குதலில், அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்ததாகவும், இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை கோரியதையும் பிரதமர் மோடி தனது பேச்சின் போது சுட்டிக்காட்டினார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே அமைதிக்கான தீர்வு ஏற்படும் என்பதை இருநாட்டு அதிபர்களிடம் பலமுறை தொலைபேசியில் பேசியதாகவும், பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை இந்தியா அனுப்பியதாகவும், விரைவில் மேலும் மருத்து உள்ளிட்ட பொருட்களை அனுப்ப உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அதிபர் ஜோ பைடன், இந்தியா –அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடைய வேண்டும் எனவும், உக்ரைன் நாட்டிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியாவுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்தார்.