13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பி ரிக்கா, வங்காளதேசம், நியூ சிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது. உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. ஒட்டு மொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அதில் கவனம் செலுத்துவோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். வர இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணையும் எங்களிடம் உள்ளது. போட்டிகளில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இப்போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டி எங்கு நடந்தாலும் அங்கு நாங்கள் விளையாட வேண்டும். எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர் கொள்ள உற்சாகமாக இருக்கிறோம். பாகிஸ்தான் அணி தனது பலம் மற்றும் போட்டியை நடத்தும் நாடுகளின் நிலைமையை மனதில் கொண்டு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கான திட்டங்களை வகுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.