இந்தியாவில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,24,002ஆக உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம், உலக அளவில் இந்தியாவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கொரோனாவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1,49,00,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவில் மட்டும் 47,29,548 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கணித்து கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்து இந்தியா வெளிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் முதல் தட்டு நாடுகளிடம் நேரடியாக பெறப்பட்ட தகவலின் மூலமும், இந்தியா போன்ற இரண்டாம் தட்டு நாடுகளுக்கு கணினி மாதிரி செயல்முறை பயன்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கணினி மாதிரி செயல்முறையை இந்தியா ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாக சுட்டிக்காட்டி உள்ளது. எனவே உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கணக்கீட்டை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது தவறான தகவல் எனவும் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கியுள்ளது.