நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன. இந்தநிலையில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த போஸ்டரில், 2014ம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ. 410ஆக இருந்தது என்றும், தற்போது 2022ம் ஆண்டு ரூ. 980க்கு விற்கப்படுகிறது என்றும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களைவிட்டு வெகு தூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.