மாநில அரசுகள் ஒருங்கிணைந்ததுதான் மத்திய அரசு; அதனால் அதை ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என்கிற விவாதம் பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரப் பரவல் குறித்தும் மாநில தன்னாட்சி குறித்தும் முன்பு ஒரு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசியது முக்கியமானது. மாநில சுயாட்சி குறித்து அவர் பேசியதன் சுருக்கம் இது:
“மாநில சுயாட்சி என்பதை எடுத்துவிட்டு, மாநில தன்னாட்சி என்பதை எடுத்துக்கொண்டு நான் பேச விரும்புகிறேன். ஏனென்றால், நம்முடைய சுயாட்சிக் கனவுகள் எல்லாம் மாநிலத்தோடு சுருங்கிவிடுகின்றன. 2019 தேர்தலில் நான் வெற்றி பெற்றதை முக்கியமான விஷயமாக நினைக்கவில்லை. ஆனால், 1996-இல் நான் முதன் முதலாகப் போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலைத்தான் மிக முக்கியமான தேர்தலாக நினைக்கிறேன். அண்ணன் திருமா சொன்னதுபோல, சமூக நீதியுடன் சமத்துவத்துடன் கூடிய ஒரு அதிகாரப் பரவல் மூலமாக அந்தத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த நேரத்தில்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டுவந்த பஞ்சாயத்துராஜ் சட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் 1996-ஆம் ஆண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அப்போது, நாங்கள் இருந்த கவுன்சில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 20 வருடங்கள் கழித்து அப்போதுதான் தமிழகத்தில் பஞ்சாயத்துராஜ் தேல்தல் நடக்கிறது. அந்தத் தேர்தல் மூலமாகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஒருவேளை அந்த நேரத்தில் அதிகாரப்பரவல், உள்ளாட்சிக்கான பஞ்சாயத்துத் தேர்தல் குறிப்பாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு இல்லை என்றால், நான் இன்று இந்த மேடையில் நின்று பேசிக்கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால், எனக்கு அந்த அளவுக்குப் பின்புலம் எல்லாம் கிடையாது. அந்த அளவில்தான் நாம் தன்னாட்சியைப் பார்க்க வேண்டி உள்ளது.
தன்னாட்சி என்பதை நாம் 73, 74 சட்டத் திருத்தத்தையொட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தன்னாட்சியையோ அல்லது மாநிலத்திற்கான சுயாட்சியையோதான் நாம் பேசுகிறோம். குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாநில சுயாட்சி என்கிற இடத்திலேயே நம் தன்னாட்சி என்பது ஏறக்குறைய விவாதிக்கப்படாத ஒரு பொருளாக உள்ளது. 73, 74 சட்டத் திருத்தத்திற்கு முன் அரசியல் சாசனத்தின் 9ஆவது ஏ பிரிவில் ரொம்பத் தெளிவாகச் சொல்கிறார்கள். இங்கு மூன்று ஆட்சி முறைகள் உள்ளன. ஒன்று மத்திய அரசாங்கம், இன்னொன்று மாநில அரசாங்கம், இன்னொன்று உள்ளாட்சிகளுக்கான அரசாங்கம். மூன்று அரசாங்கமாகத்தான் இந்தியாவினுடைய அரசியல் அமைப்பு வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலப்போக்கில் உள்ளாட்சிகளுக்கான அதிகாரத்தை நாம் மாநிலத்திடம் ஒப்படைத்துவிடுகிறோம். மாநிலத்திற்கான அதிகாரத்தை மத்திய அரசாங்கம் கொஞ்சம், கொஞ்சமாக அபகரிப்பதை நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா அரசாங்கமும் இப்படிச் செய்கிறது. ஆனால், இப்போதுள்ள அரசாங்கம் கொஞ்சம் அதிகமாகவே செய்வதை நாம் பார்க்கிறோம். எந்த அரசாங்கம், எந்தக் கட்சி என்பதையெல்லாம் தாண்டி, யாருக்கான அதிகாரத்திற்கு நான் நிற்க வேண்டும் என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரைக்கும் நாம் மாநில சுயாட்சி என்பதை எல்லாம் தாண்டி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தன்னாட்சி என்பதையெல்லாம் தாண்டி, மக்களுக்கான ஒரு சுயாட்சிக்காக நிற்கின்றபோதுதான் நம் பொருளாதார முன்னேற்றக் கனவு எல்லாம் நனவாக முடியும். ஏனெ்றால், இங்கு இரண்டு தகவல் உள்ளது. ஒன்று நம்முடைய பொருளாதாரத்தை, அதனுடைய கட்டமைப்பை மேம்படுத்துவது. மற்றொன்று, அதைப் பகிர்ந்து கொடுப்பது. இந்த இரண்டுமே சுயாட்சி இல்லை என்றால் நம்மால் நடத்த முடியாது.
1990-களில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. உலக மயமாக்கல், ஜனநாயகமாக்கல், அதிகாரப் பரவல் ஆகிய மூன்றும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு உலகமயமாக்கல் இருக்கிறது. அதிகாரப்பரவலுக்கும், ஜனநாயகமாக்கலுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது. ஏனென்றால், இந்த இரண்டும் அவ்வளவு சீக்கிரமாகக் கிடைத்துவிடாது. ஒவ்வொரு முறையும் நாம் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாநில அரசாங்கங்கள் போராடி மாநில சுயாட்சியைப் பெற வேண்டியிருக்கிறது. அதேபோன்று மாநில அரசாங்கத்திடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுயாட்சியைப் போராடிப் பெற வேண்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் மக்கள் போராடி கிராம சபை மூலமாக நம்முடைய அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது.
தன்னாட்சிகள் என்று வரும்போது, மாநில சுயாட்சி என்கிற கோஷத்தோடு முடிந்துவிடக் கூடாது. மாநில சுயாட்சிகளையும் தாண்டிய அமைப்புகளாகக் கடைசியாக மக்கள் இருக்கிறார்கள். எல்லா மணியையும் கிராம சபையில்போய்தான் நாம் அடிக்க முடியும். ஒரு கிராமத்திற்கு, ஒரு யூனியனுக்கு, ஒரு மாவட்டத்திற்கு, ஒரு மாநிலத்திற்கு அல்லது ஒரு மத்திய அரசிற்கு என்றுதான் நாம் செல்ல முடியும். நம்முடைய மாடல் ஒரு டாப் டவுன் மாடலாகத்தான் இருக்கிறது. அரசியல் சாசனம் என்ன சொன்னாலும், எந்த மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், மாநில சுயாட்சிக்கு ஒலிக்கிற கோஷங்கள் நம் மாநிலத்தில் இருந்ததைவிட, ஒரு பகுதி மாநில சுயாட்சியைப் பற்றியே நாம் பேசுகிறோம். ஆனால், மக்களுக்கான சுயாட்சியால் மட்டுமே நாம் வளர்ச்சியை முன்னெடுக்க முடியும். தேவை அடிப்படையில்தான் ஒரு தொழிலோ அல்லது கல்வியோ, சுகாதாரமோ, உள்கட்டமைப்போ உருவாக்க முடியும். எங்கள் ஊருக்கு என்ன தேவை என்பது எங்கள் ஊரில் இருக்கிற மக்களுக்குத்தான் ரொம்பத் தெளிவாகத் தெரியும். எங்கள் ஊராட்சி ஒன்றியத்திற்கு என்ன தேவை என்பது எங்கள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மக்களுக்குத்தான் தெளிவாகத் தெரியும். இரண்டு முறை உள்ளாட்சி அமைப்பில் இருந்ததால் இதை நான் சொல்ல முடிகிறது. எந்தவிதமான திட்டங்களும் இல்லாமல் ஒரு சாதாரண பொருளாதார அடிப்படையில் உருவாக்கிய நிதியை வைத்து அதைப் பரவலாக்குவது அல்லது திட்டங்களை பரவலாக்குவதால் மட்டுமே மாநில சுயாட்சியோ அல்லது மக்களுடைய தன்னாட்சியோ அல்லது உள்ளாட்சியினுடைய அதிகாரமாகவோ இருக்க முடியாது. அந்த அதிகாரப் பரவல் என்பது திருமா அண்ணன் சொன்னதுபோல் சமூக நீதியோடு சேர்ந்துதான் வர வேண்டும். சமூக நீதியைப் பிரித்துவிட்டு அதிகாரத்தைக் கொடுத்தாலோ அந்த அதிகாரத்தை ஏதோவொரு வகையில் அனுபவிப்பவர்கள், ஏதோவொரு வகையில் கட்டுப்படுத்துகிறவர்கள், ஏற்கனவே அந்த அதிகாரம் தனக்கு மட்டுமே என்று நம்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆண்களாக இருக்கலாம் அல்லது உயர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது சமூகத்தில் வர்க்கரீதியாகப் பணக்காரர்களாக இருக்கலாம். இவர்களின் கையில்தான் பெரும்பாலும் அதிகாரம் குவிந்துள்ளது. அதிகாரம் என்றும் சுயாட்சி என்றும் வரும்போது, இந்த அதிகாரத்தைச் சமூக நீதியையொட்டி ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் இருந்து கொடுத்தால் மட்டும்தான், ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து அந்தத் திட்டங்களுக்கான வரைபடத்தைப் பெற்றால்மட்டும்தான், அது ஒரு உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்.
மேற்கத்திய நாடுகளின் ஜனநாயகம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஜனநாயகமாக இருக்கிறது. அவர்களின் தேர்தல் முறைகளில் நிறைய மாற்றங்கள் இருந்தால்கூடப் பெரும் பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஜனநாயகமாகத்தான் இருக்கிறது. ஆனால், நம்முடைய ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இருக்கிறது. மக்கள் தங்களைத் தாமே எங்காவது பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்வதுதான் உண்மையான ஜனநாயகத்தின் லட்சியமாக இருக்க முடியும். 70 ஆண்டுக்காலம் ஆகியுள்ளது. இன்னும் 70 ஆண்டுக்காலம்கூட ஆகலாம். ஆனால், இறுதி லட்சியம் என்பது மக்கள் கையில் அதிகாரம் இருப்பது மட்டும்தான் ஜனநாயகமாக இருக்க முடியும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சிகளின் ஜனநாயகம்தான் இன்றைக்கு அரசியல் ஜனநாயகமாக இருக்கிறது. அரசியல் கட்சிகளின் முடிவுகள்தான் இன்றைக்கு அரசாங்கத்தின் முடிவாக இருக்கிறது. அதிகாரம் என்பது நாம் எவ்வளவுதான் ஜனநாயகம் பற்றிப் பேசினாலும், அரசியல் சாசனம் மூன்றுவிதமான அரசுகள் பற்றிப் பேசினாலும், கிராம சபைகள் சட்டப்புத்தகங்கள் இருந்தாலும், இன்றைக்கு இருக்கிற அதிகாரம் குவிக்கப்பட்டுதான் இருக்கிறது. எந்த அளவுக்குக் குவிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சித்தாந்தத்தைப் பொறுத்து, ஒரு அரசியல் கட்சியைப் பொறுத்து, ஒரு அரசாங்கத்தைப் பொறுத்து, அதை ஆளுகிற நபர்களைப் பொறுத்து மாறுபடுகிறது. ஏன் இதைத் தீவிரமாகப் பேசுகிறோம் என்றால் இப்போது, தீவிரமாக மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதன் மூலமாக மக்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இதற்கு முடிவு என்பது மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாநில அரசாங்கத்திற்கு அந்த அதிகாரத்தை வாங்குவது மட்டுமல்ல, மாநில அரசாங்கத்திடம் இருந்து அந்த அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அங்கிருந்து மக்களுக்கும் கடத்துகிற ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும். எந்தவொரு பொருளாதாரக் கட்டமைப்புகளுமே, இன்றைக்கு டிரில்லியன் டாலர் எக்கானமி கனவு என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டு வரலாற்றில் இதற்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வேலையை எல்லாம் அதிகாரிகள் செய்கிற ஒரு அரசியலமைப்பில்தான் நாம் இருக்கிறோம். மிக அரிதாக அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர், முதலமைச்சர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு பங்கு இருக்கும். ஆனால், இன்றைக்கு ஒரு சமூகத்தில் இருந்து வந்து அதிலும் குறிப்பாக பிசினஸ் கம்யூனிட்டியில் இருந்து வந்து இதுபோன்ற ஒரு மாற்றம் வந்திருக்கிறது என்றால், அதை முக்கியமாகப் பார்க்கிறேன். அதுவும் தமிழ்நாட்டில் இருந்துதான் தைரியம் வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். காலச்சூழலும் அதற்குத் தகுந்தாற்போல் பொருந்திவருகிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். ஒருவிதப் பயத்துடனேயேதான் இங்குள்ள தொழில்முனைவோர்கள் இருக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், அவர்களுக்கு என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதை அவர்கள் எக்சசைஸ் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் நிதி கொடுக்கும்போது இன்னொரு கட்சிக்குத் தெரியாமல்தான் கொடுக்க வேண்டியுள்ளது. கொடுத்த பிசினஸ்மேனும், வாங்கிய கட்சியும் டிக்ளர் பண்ண வேண்டும் என்ற சூழல் இன்றைக்கு இல்லை. இதுமாதிரியான சங்கடங்கள், பயங்கள், தர்மசங்கடங்கள் இதையெல்லாம் மீறி பிசினஸ் கம்யூனிட்டி எல்லாம் ஒன்று சேர்ந்து இது மாதிரியான கனவைத் தமிழ்நாட்டில் காண வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு வரலாற்றில் ரொம்ப முக்கியமான விசயம். எல்லோரும் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்றால் அதற்கான சுயாட்சி என்பது எல்லோருக்கும் வேண்டும். மக்களோடு சுயாட்சி என்பதில் தொழில்முனைவோரின் சுயாட்சியும், தன்னாட்சியும் அடங்கும். பிசினஸ் கம்யூனிட்டிக்கு அந்த நாட்டு மக்களுக்கு என்ன மாதிரியான திட்டங்கள் வேண்டும் என்று இறுதியாக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கரூரைப் பொறுத்தவரையில் பிசினஸ்மேன் கேட்பதெல்லாம், ‘எங்களுக்கு என்ன மாதிரியான மேன் பவர் வேண்டும் என்பது தெரியாமல் ஒரு எஜுகேஷன் சிஸ்டத்தை வைத்திருக்கிறீர்கள். நாங்கள் வேலை கொடுப்பதால் அவர்களுக்கு என்ன வேலை தெரியுமோ அந்த வேலையைக் கொடுக்கிறோம். இரண்டு பேரும் இணைந்து வேலை செய்வதற்கான ஒரு ஸ்பேஸ் இங்கு இல்லாமல் போய்விடுகிறது. கல்வித் திட்டம் என்பது அதிகாரிகளாலும், அரசியலாலும் இங்கு வகுக்கப்படுகிற ஒரு சூழல் இருக்கிறது. அதை உற்றுப்பார்த்தால் தொழில் முனைவோருக்கு அதில் ஒரு துளி அளவுகூடப் பங்கு இல்லை. ஆனால், முடிவில் அவர்களுக்கு வேலை கொடுங்கள் என்று சொல்வோம். இன்றைக்கு கரூரில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள். பார்க்கப்போனால் அது ரொம்ப சின்ன ஊர்தான். நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 70 சதவீதம் பேர் பெண்கள். இதுபோன்ற சூழலில் பங்களிப்பு என்பது ரொம்பவும் முக்கியமானதாக இருக்கும். மத்திய அரசு கட்டுப்படுத்தினாலும் சரி, மாநில அரசு கட்டுப்படுத்தினாலும் சரி, உள்ளாட்சி அமைப்பு கட்டுப்படுத்தினாலும் சரி இறுதி அதிகாரம் என்பது இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களின் கைகளில் மக்களின் கனவாக இருக்கும்போதுதான் நம்முடைய தேசம் முன்னேற முடியும். அதிகாரப் பரவல் என்பது சமூக நீதியோடு சேர்ந்ததாக இருக்க வேண்டும். அதிகாரப் பரவலோடு சமூக நீதி இல்லை என்றால் என்னைப் போன்றவர்கள் அரசியலுக்கோ இல்லை வேறு எந்தத் துறைகளுக்கோ வருவது சிரமம். அதற்கு வந்து திருமா அண்ணன் சொன்னதுபோன்று நீதிமன்றத்தாலோ அல்லது இடதுக்கீட்டு மூலமாக வருபவர்களுக்குத் தகுதி இல்லை என்பதோ கிடையாது. 33 சதவீதம் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கின்றோம். எனக்கெல்லாம் அந்த 33 சதவீதத்தில் உடன்பாடே கிடையாது. 50 சதவீதம் மக்கள் உள்ளவர்கள் எதற்கு 33 சதவீதத்துக்குப் போய் கெஞ்ச வேண்டும். எனக்கோ, கனிமொழிக்கோ என்ன திறமை இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் பலரின் பினாமியாகத்தான் இருக்கிறீர்கள் என்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.
கடந்த 300 வருடமாகப் பெண்களைச் சமையல்கட்டுக்குள்ளேயே வைத்துள்ளீர்கள். ஒரே நாளில் பெண்கள் பிரசிடெண்ட் ஆகிட்டோம், கவுன்சிலர் ஆகிட்டோம் என்பதால் ஷரத்து 9, 9ஏ, அட்டவணை 11, 12, அமெண்ட்மெண்ட் 73, 74 எல்லாவற்றையும் படித்துவிட்டு நாங்கள் வந்துவிட முடியாது. அதற்கென்று எங்களுக்கு ஒரு நேரம் தேவைப்படுகிறது. அதற்கான இந்தக் கேள்வியை நாங்கள் பொதுவெளியில் வைக்க முடியாது. 542 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நானும் 25 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நானும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டு இருக்கிறேன். 542 நாடாளுமன்ற உறுப்பினரில் 530 பேர் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும். 542 நாடாளுமன்ற உறுப்பினரில் எத்தனை பேர் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பார்கள். பெரும்பாலானோர் பேசாமலேயே இருக்கிறார்கள். அன்றைக்கு ஆண்கள் எல்லாம் லோக்சபாவுக்குப் போய் இந்த ஜனநாயகமே குடிமுழுகிப்போச்சு என்று யாரும் கதறியது கிடையாது. எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் வந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஒரு ஸ்பேஸ் கொடுக்காமல் நாம் அவர்கள் மீது விமர்சனங்களை வைக்கிறோம். இவர்கள் இடஒதுக்கீட்டில் படித்து வந்திருக்கிறார்கள். கோட்டாவில் வந்திருக்கிறார்கள். ஏன் இட ஒதுக்கீட்டில் வர வேண்டியுள்ளது, ஏன் கோட்டோவில் வர வேண்டியுள்ளது? இந்தச் சமூகம் என்னைத் தேர்தலில் நிற்க விடவில்லை. கோட்டாவாக இருந்தாலும் சரி, இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி அல்லது அரசியலில் கிடைக்கக்கூடிய இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி. அது ஒரு சம வாய்ப்புக்கான இடம்தான். இந்தச் சம வாய்ப்பு அதிகாரப் பரவலுடன்கூடிய சம வாய்ப்பாக இருக்க வேண்டும். சமூகநீதி என்பதும் அதிகாரப் பரவலுடன் கூடிய சமூகநீதியாக இருக்க வேண்டும்.