மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைப் பரப்புச் செயலர் அனுசாவை தமிழக அரசு’நெகிழி மாசில்லா தமிழ்நாடு அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவின் தூதுவராக நியமித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த அனுசா டாக்டர் பட்டம் பெற்றவர்.முதுகலை கல்வியை அமெரிக்காவில் முடித்த அவர்,பொறியியல் கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநரும் ஆவர். கல்வி நிறுவனம்,சுற்று சூழல் ஆர்வம்,அரசியல் பணி பல துறைகளில் செயல்படும் பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார்.குறிப்பாக சுற்று சூழல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக அவருடைய பொறியியல் கல்லூரியில் சுற்று சூழலுக்கு என தனித்துறையை உருவாக்கியுள்ளார்.தமிழகத்தில் இதுவரை எந்த கல்வி நிறுவனங்களிலும் சுற்று சூழலுக்கு என தனித் துறைகள் இல்லாத நிலையில்,அனுசாவின் இந்த பெரு முயற்சி பாராட்டுக்குரியது.சுற்று சூழல் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழக அரசு அவருக்கு இந்தப் பதவியை வழங்கி கௌரவித்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
“தமிழக அரசு தங்களுக்கு எந்த அடிப்படையில் இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளது அதற்கான பின்னணி என்ன? ”
“சிறுவயதில் இருந்தே இயற்கையின் மீது அதிக ஆர்வம் உண்டு.அதன் காரணமாக சுற்றுசூழலுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு அதற்கான வேலைகளில் இறங்கினேன்.அதன் விளைவாக பள்ளி,கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து பொதுமக்களிடையே நடத்தினேன்.அந்த அடிப்படையில் தமிழக அரசு எனக்கு இந்த கௌரவ பொறுப்பை வழங்கியுள்ளது.தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பில் உள்ள செயல்பாடுகளின் முழுவிவரம் இன்னும் தெரியவில்லை.மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.அதனால் அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம். ”
“சுற்று சூழல் விழிப்புணர்வில் நீங்கள் செய்த முக்கிய பணி… ?”
சுற்றுச் சூழல் பணியில் இதுவரை சுமார் ஆறு லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.தி இந்துவுடன் இணைந்துபீச் கீளினிங் பணியை செய்துள்ளேன்.கடந்த பத்து ஆண்டுகளாக சுற்று சூழல் கல்வியில் ஏராளமான மாணவர்களை உருவாக்கியுள்ளேன்.அதில் எங்கள் கல்லூரியில் படித்த மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு மறுசுழற்சி செய்து அவற்றை பயன்பயன்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் கோவை மாநகராட்சியுடன் இணைந்து சுற்று சூழல் விழிப்புணர்வு பணியில் கின்னஸ்ரெக்கார்டு செய்துள்ளோம்.
இதில் மிக முக்கியமாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் என்னுடைய இந்த ஆர்வத்தை கண்டு எனக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.அப்படியே மறைந்த நடிகரும் சுற்று சூழல் ஆர்வலரான விவேக் சாருடன் இணைந்து சுற்று சூழல் பணிகளை செய்தேன்.கடந்த ஜனவரி மாதம் சுற்று சூழல் குறித்து ஒரு நிகழ்வுக்கு நானும், விவேக் சாரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவர் நம்மை விட்டு சென்று விட்டார். இன்று அவர் இல்லை என்றாலும் அவர் நினைத்ததை செய்யவேண்டும் வேண்டும் என்று அவருடைய நினைவாக அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்த இருக்கிறேன்.”
“தமிழகஅரசு கொண்டு வந்த பிளாஸ்டிக் ஒழிப்பு வெற்றி பெறவில்லையே?அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் …?”
“மாற்று பொருள் கண்டுபிடிக்காமல் அதை நடைமுறைப்படுத்துவது சிரமம்.மாற்றுப்பொருள்கொடுக்காமல் மக்களை இதை பின்பற்றுங்கள் என்று கூறினால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.மாற்றுப் பொருட்களாக,மக்கும் பிளாஸ்டிக்,இலைகள் தேங்காய் நார் என பல பொருட்கள் நாம் அப்போது அடையாளம் காணமுடிந்தது. அதை மக்களுக்கு மலிவு விலையில் அரசாங்கமே வழங்கினால் மட்டுமே மக்கள் அதனை பின்பற்றுவார்கள்”
“தி.மு.க தலைமையிலான அரசு இந்த அங்கீகாரத்தை உங்களுக்கு வழங்கியுள்ளது.தேர்தல் நேரத்தில் தி.மு.க எதிர்த்து உங்கள் கட்சியினர் செயல்பட்டனர்.தற்போது இந்த அங்கீகாரத்தை எப்படி பார்க்கிறார்கள்?
“எங்கள் கட்சியின் தலைவர் கமலஹாசன் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.அப்போது’நல்லபொறுப்பை அரசு உங்களுக்கு வழங்கியுள்ளது.அதனை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள்’என்று ஊக்கு வித்ததோடு பாராட்டும் தெரிவித்தார்.அதனால் கட்சியில் உள்ள பலரும் அழைத்து பாராட்டிள்ளனர் அவர்களுக்கு எனது நன்றிகள் ”
“இப்படியான செயல்பாடுகளால் மாசில்லா தமிழகத்தை உருவாக்க முடியுமா ? ”
“மாசில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இந்த அமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த பணியில் மிக முக்கியமாக இளம் சிறார்களிடமும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.அவ்வாறே மாசில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவோம்.மேலும் சேவை என்பது எங்கிருந்து வேண்டு மென்றாலும் செய்யலாம்.அது அரசியலாக இருந்தாலும், தனி அமைப்பாக இருந்தாலும் எங்கிருந்து வேண்டும்மென்றாலும் சேவை செய்யலாம்.ஆனால் நோக்கம் சரியானதாக,இருக்க வேண்டும்.”என்றார்.