பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட கரு, குறைபாடுள்ள கரு ஆகியவற்றை கலைப்பதற்கான உச்சவரம்பு காலத்தை 24 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
‘ஒரு பெண்ணுக்கு மருத்துவ காரணங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல், கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் பலாத்காரம் போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ, அதை 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம்,’ என ‘மருத்துவ கருக்கலைப்பு சட்டம்- 1971’ கூறுகிறது. மேலும், ‘இந்த கருக்கலைப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மட்டுமே செய்யலாம். கரு 12 வாரங்களுக்குள் இருந்தால் அதை கலைக்கும் முடிவை, அந்த மருத்துவரே எடுக்கலாம். அதற்கு மேற்பட்ட காலமாக இருந்தால், 2 மருத்துவர்கள் கலந்து ஆலோசித்த பிறகே கருவை கலைப்பது பற்றி முடிவு செய்ய முடியும்,’ என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்நிலையில், இச்சட்டத்தை திருத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டள்ள அறிவிப்பாணையில் “கருவை கலைப்பதற்கான கால உச்சவரம்பு 24 வாரங்களாக உயர்த்தி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 20 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க ஒரு மருத்துவரின் ஆலோசனையே போதுமானது.20 முதல் 24 வாரங்கள் வரை இரண்டு மருத்துவர்கள் ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது