காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தியிடம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் ஏரியில் கடந்த ஆறு ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கப்படுவதை நிறுத்த இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால், ஆடுமாடுகள் செத்து மடிவதும், குழந்தைகள், முதியவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகவே உள்ளதாக குற்றஞ்சாட்டி கோரிக்கை மனுவை பொதுமக்கள் அளித்தனர். அந்தமனுவில் ”தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் கால்நடைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது பகுதி விவசாய பகுதி என்பதால் முழுக்க முழுக்க இந்த ஏரி தண்ணீரை நம்பி தான் உள்ளதாகவும், கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்ற நிலையில் பெரும்பாலானோர் விவசாய வேலை மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருவதால் கால்நடைகளையும் வளர்த்து வருவதாகவும், தற்போது கோடைகாலம் உச்சத்தை தொட்டு உள்ள நிலையில், மற்ற சிறிய குட்டைகளில் இருந்த நீர் அனைத்தும் வற்றி உள்ளதால் கால்நடைகள் அனைத்தும் தேனம்பாக்கம் ஏரியில் உள்ள குடிநீரை நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியிலுள்ள கழுவுநீர் முழுவதும் ஏரியில் கலந்து வருவதால், இந்த ஏரி நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் கழிவு நீராக மாறி உள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, அவை உயிரிழப்பதற்கு இந்த தண்ணீரும் ஒரு காரணமாக இருந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து ஆறு ஆண்டுகளாக புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.